யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் , கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் காவல்துறையினர் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் இந்த வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். கடத்தல் சம்பவங்கள் ஊடாக ஒரு சிலர் அதிகளவான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்திருக்கிறார்கள் அவர்களுடன் சில காவல்துறையினரும் அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்
இது தொடர்பாக வடமராட்சி கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் காவல்துறையினருடைய பெயர் விவரங்கள் யாவும் நாங்கள் எடுத்து, இந்த பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
இதனை பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து அவர்களை விசாரணைக்கு அழைக்கும் போது இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்
முன்னைய அரசாங்கங்கள் போன்று இந்த அரசாங்கத்திலும் கடத்தல் சம்பவங்களை செய்துவிட்டு அல்லது அவர்களுக்கு உதவி செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பது தவறானது. இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைவரையும் கைது செய்து சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம். கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையினரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

