ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34/1 என்ற தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு இந்த புதிய தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனை வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளது.
2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள முறையே 37 மற்றும் 40ம் அமர்வுகளில் இந்த தீர்மானம் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு அளித்த வாக்குறுதியை அரசாங்கம் முழு அளவில் அமுல்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
காணிகளை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்களின் உறவுகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், அரசியல் சாசனத் திருத்தங்களை அமுல்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் உரிய முனைப்பு காட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்கள் தங்களது பொறுமையின் எல்லையை கடந்து விட்டதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்க முனைப்புக்கள் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட விடயங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியன ஐ.நா தீர்மானம் அமுல்படுத்தப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளது.
1 comment
நல்லிணக்க முனைப்புக்கள் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட விடயங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உன்னிப்பாக கண்காணிக்கும்” – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இது தொடர்பாக உள்ள, கீழே கூறப்பட்ட, தனது தீர்மானத்தை (11.03.17, வவுனியா) நிறைவேற்றி வைக்குமா?
வவுனியா தீர்மானம் 1 வது:
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட எச்.ஆர்.சி 30 – 1 என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
இதை அடைவதற்கு த.தே.கூ. செய்ய வேண்டியது:
கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஐ.நா. மனித உரிமைச் சபையின் தீர்மானங்களின் நோக்கத்தை அடையத் தேவையான இலக்குகள், இலக்குகளை அடையத் தேவையான பணிகள், பணிகளை ஆரம்பிக்கும் தேதிகள், பணிகளை நிறைவேற்றும் தேதிகள், பணிகளுக்கு பொறுப்பான நபர்கள் மற்றும் முடிந்த பணிகள் (சதவீதத்தில்) அடங்கிய ஒரு கால அட்டவணையை (Project schedule) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குனி 2017 இறுதிக்குள் வெளியிட வேண்டும்.
நோக்கம் (Aim): இலங்கையின் முழு மக்களின் அனைத்து மனித உரிமைகளாலும் மற்றும் அடிப்படை சுதந்திரங்களாலும் வரும் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதை உறுதி செய்யுங்கள்.
இலக்கு (goal) 1: குற்றவியல் விசாரணைக்கு தயார் செய்யுங்கள்.
இலக்கு 2: உண்மையைத் தேடி, பொறுப்புக் கூறி, நீதி வழங்குங்கள்.
இலக்கு 3: இழப்பீடுகளைக் கொடுங்கள்.
இலக்கு 4: கொடூர குற்றங்களை மீண்டும் செய்யாது தடுங்கள்.
இலக்கு 5: நல்லிணக்கத்தை உருவாக்குங்கள்.
இலக்கு 6: மனித உரிமைகளை அமுல்படுத்துங்கள்.
வவுனியா தீர்மானம் 2 வது:
ஐ.நா. தீர்மானங்கள் கடுமையான நிபந்தனையின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட்டு மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
இதை அடைவதற்கு த.தே.கூ. செய்ய வேண்டியது:
அட்டவணையில் உள்ள பணிகளின் முன்னேற்றத்தை வாரந்தோறும் கண்காணித்து, தேவைக்கு ஏற்ப சரிசெய்வதற்கான செயல்களையும் (corrective actions) மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் (preventive actions) எடுத்து, பணிகளை முடித்து, இலக்குகளை அடைந்து நோக்கங்களை அடைய, திட்ட முகாமைத்துவத்தை பயனுள்ளதாகவும் (effectively) திறமையாகவும் (efficiently) செய்ய ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்துக்கு வாரந்தோறும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தினால் முடிக்கப்படாத பணிகளை ஐ.நா தூதுவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாராந்தம் சுட்டிகாட்ட வேண்டும்.
வவுனியா தீர்மானம் 3 வது:
இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை (1 வது வவுனியா தீர்மானம்) தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த தீர்மானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக அதற்குரிய பெறுபேறுகளை ஐக்கிய நாடுகள் பேரவை உறுதிசெய்ய வேண்டும்.
இதை அடைவதற்கு த.தே.கூ. செய்ய வேண்டியது:
தீர்மானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளையும் பட்டியலிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக வெளியிட வேண்டும்.
அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக அதற்குரிய பெறுபேறுகளை ஐக்கிய நாடுகள் பேரவை உறுதி செய்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடை முறைப்படுத்துவிக்க வேண்டும்.
தமிழர்கள் எல்லோரும் தங்கள் பங்கை நன்கு செலுத்தி தங்கள் உரிமைகளை கூடிய விரைவில் முழுமையாக எடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களுடன் சேர்ந்து குழுப் பணி செய்ய வேண்டும்.