அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிபபிட்டுள்ளார். நாட்டுக்கு ஏதேனும் நல்லதை செய்ய முடிந்தால் தாம் அரசியலில் ஈடுபடுவதற்கு தயார் என தெரிவித்துள்ள அவர் தமக்கு அந்த தகுதி உண்டு எனவும் அதனை தாம் நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவரும் செய்யாத காரியங்களை தாம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் யுத்தத்தின் போது ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் புள்ளி விபரத் தகவல் பிழையானது எனவும் மெய்யான இழப்பு விபரங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமை நீடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் பேசிக் கொண்டேயிருப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் குற்றச் செயல்களை மேற்கொண்ட குழுக்கள் இராணுவத்தில் இருக்கவில்லை எனவும், தமக்கு தெரியாமல் சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.