2025 : மாறியவை? மாறாதவை?நிலாந்தன்.
இந்த ஆண்டு பிறந்த போது ஒரு புதிய அரசாங்கம், புதிய வாக்குறுதிகளோடும் புதிய நம்பிக்கைகளோடும் ஆட்சிக்கு வந்திருந்தது.அது தனக்கு முன்பிருந்த எல்லா அரசாங்கங்களை விடவும் தன்னை வேறான ஒன்றாகப் பிரகடனப்படுத்தியது.இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த,ஆனால் அந்தக் கொள்கைகளை எப்பொழுதோ கைவிட்ட ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது இலங்கைத் தீவில் இதுவரையிலும் ஆட்சி செய்த மேட்டுக்குடி அரசியல் கட்சிகளிடமிருந்து பண்பினால் வேறுபட்டது என்பதில் சந்தேகமில்லை.அதனால்தான்,அவர்கள் மக்கள் மத்தியில் மாற்றத்தை குறித்த புதிய நம்பிக்கைகளை,எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார்கள்.ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலான காலப்பகுதியில் குறிப்பாக இந்த ஆண்டில் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி செய்தவைகள் என்ன? செய்யாதவைகள் என்ன?
முதலாவதாக, ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கப் போவதாக வாக்குறுதி அளித்தார்கள்.அதில் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஒப்பீட்டளவில் எளிமையானவர்களாக, மக்களுக்கு நெருக்கமானவர்களாக,அரச போகங்களை அளவுக்கு மிஞ்சி அனுபவிக்காதவர்களாகக் காணப்படுகிறார்கள்.ஜனாதிபதி மிகவும் எளிமையாகக் காட்சி தருகிறார். அவருடைய நடை உடை பாவனை உடல் மொழி எல்லாவற்றிலும் எளிமை தெரிகிறது. மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒருவராக மக்களால் தொட்டுப்பழகக் கூடிய ஒருவராகக் காணப்படுகிறார். அவர் மக்களுடைய முதுகை தடவுகிறார்.மக்கள் அவரைக் கும்பிட்டால்,திடுக்கிட்டு அவ்வாறு கும்பிடுவதைத் தடுக்கிறார்.கடந்த நூற்றாண்டில் புரட்சிப் படைகள் அணிந்திருந்தது போல இரண்டு பொக்கற்றுகளைக் கொண்ட சேர்ட் அணிந்திருக்கிறார்.ஜனாதிபதியின் தாயார் இப்பொழுதும் முச்சக்கர வண்டியில்தான் பயணம் செய்கிறார்.அந்த முதிய பெண்,ஆசைகள் குறைந்த,ஆடம்பரம் இல்லாத,பகட்டில்லாத ஒரு வார்த்தைதான் வாழ்கிறார்.
அமைச்சர்களுக்கும் ராஜபோகங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.அமைச்சர்கள் பந்தா இல்லாமல் மக்களை நோக்கி வருகிறார்கள்.சில சமயங்களில் புகையிரதத்தில் பயணம் செய்கிறார்கள்.
எனவே இந்த அரசாங்கம் தனக்கு முன்னிருந்த எல்லா மேட்டுக்குடி அரசியல்வாதிகளையும் போலன்றி எளிமையானதாக இருக்கிறது என்பதும் மக்களுக்கு எளிதில் கிடைக்க கூடியதாக இருக்கிறது என்பதும் சிங்கள மக்களின் நோக்குநிலையில் இருந்தும் ஒருபகுதி முஸ்லிம் மக்களின் நோக்குநிலையில் இருந்தும் ஒரு பகுதி தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்தும் ஒப்பீட்டளவில் மாற்றம்தான்.இவற்றையெல்லாம் அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி பாட்டுப் போட்டு, கவர்ச்சியான பிரச்சாரக் காணொளிகளாகப் பரப்புகிறது.காணொளி மாற்றம்?
அடுத்தது, சுத்தமான சிறீலங்கா என்ற வாக்குறுதி. இதனை அவர்கள் சூழலியல் அர்த்தத்திலும் செய்து முடிக்கவில்லை.அரசியல் அர்த்தத்திலும் செய்து முடிக்கவில்லை.ஆட்சிக்கு வந்த புதிதில் அனுர, நீண்ட தூரப் பயணங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறைகளை உருவாக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குப் போகும் நெடுந்தூரப் பயணங்களில் இப்பொழுதும் பெண்கள் விரும்பிச்செல்ல முடியாத,நாறும் கழிப்பறைகள்தான் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
சுற்றுச்சூழல் தூய்மையில் மட்டுமல்ல ஆட்சிக் கலாச்சாரத்தில் ஊழலற்ற, முறைகேடுகள் அற்ற சுத்தமான ஆட்சியை உருவாக்கப் போவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது.இந்த விடயத்தில் கடந்த ஆண்டு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இக்கட்டுரை எழுதப்படுகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிகளின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஊழல்,முறைகேடு,அதிகாரத் துஸ்பிரயோகம்,பாதாள உலகக் கும்பல்கள், போதைப்பொருள் குற்றங்கள்…போன்றவற்றுக்கு எதிராக அரசாங்கம் முன்னேற்றங்களைக் காட்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் ஊழல் முறைகேடு,அதிகாரத் துஷ்பிரயோகம்,போதைப்பொருள் வாணிபம்,பாதாள உலக குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக அதிகளவு கைது நடவடிக்கைகளை முன்னெடுத்த ஓராண்டாக கடந்த ஆண்டைக் குறிப்பிடலாம்.கூடவே ஒரு முன்னாள் ஜனாதிபதியைத் தடுப்புக் காவலில் வைத்த ஆண்டாகவும் கடந்த ஆண்டைக் குறிப்பிடலாம்.
கைது செய்யப்படும் குற்றவாளிகளில் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சிகளோடு தொடர்பாக இருக்கிறார்கள் என்று காட்டுவதன்மூலம் எதிர்க்கட்சிகளை மேலும் தற்காப்பு நிலைக்குத் தள்ளலாம்.எனவே ஊழலுக்கும் போதை வாணிபத்துக்கும் முறைகேடுகளுக்கும் எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளும் உள்நோக்கத்தை கொண்டவை.
இவையெல்லாம் இந்த அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்க கூறியதுபோல “எல்போர்ட்” அரசாங்கம் இல்லை என்பதனை நிரூபிக்கத் தேவையான நடவடிக்கைகள்.ஆனாலும் பொருளாதார விடையங்களில் அரசாங்கம் இப்பொழுதும் ரணில் விக்கிரமசிங்க வகுத்துக் கொடுத்த தடத்தில்தான் நிற்கின்றது. அதை கடந்து போக முடியாது.
ஏனென்றால் இலங்கையை தீவின் அரசு கட்டமைப்பு என்பது மாறாத மூன்று மூலக்கூறுகளையும் மாறுகின்ற ஒரு மூலக்கூறையும் கொண்டது.மாறாத மூலக்கூறுகள் ஆவன,பௌத்த மகா சங்கம்,முப்படைகள்,நீதிபரிபாலனக் கட்டமைப்பு என்பவைகளாகும். மாறக்கூடியது அரசாங்கம்.அரசாங்கம் மாறும் போதும் அரசுக் கட்டமைப்பை உருவாக்கும் ஏனைய மூன்று கட்டமைப்புகளும் மாறப்போவதில்லை. எனவே அங்கே மாற்றத்துக்கு வரையறை உண்டு.
இடதுசாரி மரபில் வந்த அனுர மகாநாயக்கர்களின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து அவர்களுடைய ஆசிர்வாதங்களை பெறுகிறார்.கைகளில் பிரித் ஓதிய நூலைக் கட்டிக் கொள்கிறார்.தனது தமிழ் நண்பர்கள் மத்தியில் ஒரு லிபரல் சிந்தனாவாதியாகவும் பெண்ணியவாதியாகவும் அறியப்பட்ட பிரதமர் ஹரிணி,பிரசித்தமான தமிழ்க் கோவில்களைத் தேடிச்சென்று வணங்குகிறார். அங்கே அவருக்குப் போர்க்கப்படும் பொன்னாடைகளோடு படங்களில் காணப்படுகிறார்.இந்த இரண்டு உதாரணங்களும் மாற்றத்துக்கான வரையறைகளை உணர்த்தும் குறியீடுகள் ஆகும். அதுமட்டுமல்ல அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தவிருக்கும் புதிய கல்வி சீர்திருத்தத்துக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை அகற்றப்படவில்லை.அதை இப்போதைக்கு அகற்ற அரசாங்கம் தயங்குகிறது. அதுவும் மாற்றத்துக்குள்ள வரையறைகளை உணர்த்துவது.
அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியேவர அல்லது அதில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்த இந்த அரசாங்கத்தால் முடிக்கவில்லை என்பதனை இந்த ஆண்டு நிரூபித்திருக்கிறது. அப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கு ஒர் ஆண்டு போதாது என்று ஒரு வாதம் எழும். அது சரி. ஆனால் அவ்வாறான மாற்றங்களை இந்த அரசாங்கம் செய்யும் என்று தமிழ் மக்கள் நம்பக்கூடிய ஓர் அரசியற் சூழலை உருவாக்கக்கூட அரசாங்கத்தால் முடியவில்லை.
இந்த அரசாங்கம்,தான் இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்று கூறுகிறது.இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்பதனை அவர்கள் நிரூபிக்க வேண்டிய இடம் எதுவென்றால்,இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், தியாகம் செய்யத் தயாராக இருப்பதுதான்.
இந்த ஆண்டு முழுவதும் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிராக போதைப்பொருள் வாணிபத்துக்கும் பாதாள உலக கும்பல்களுக்கும் எதிராக போராடிய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராக எங்கே போராடியது? இனமுரண்பாட்டோடு சம்பந்தப்பட்ட அதாவது பொறுப்புக் கூறலோடு சம்பந்தப்பட்ட எத்தனை பேர் கைது செய்யப்படிருக்கிறார்கள்?
அனைத்துலக சமூகத்தின் வார்த்தைகளில் அல்லது ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பொறுப்புக்கூறத் தயாரில்லை.ஏனென்றால் இலங்கைத் தீவில் பொறுப்புக்கூறல் என்பது இனவாதத்திற்கு எதிராகத் திட்டவட்டமான துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதுதான்.ஆனால் அதைச் செய்யத் தேவையான துணிச்சல்,அரசியல் திட சங்கற்பம் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டுக்கு மேலான காலம் நிரூபித்திருக்கிறது.இலங்கைத் தீவில் இனவாதத்துக்கு எதிராகப்போராடுவது என்பது அரசுக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடுவதுதான்,அதாவது தேசிய மக்கள் சக்தி ஏதன் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகக் காணப்படுகிறதோ,அந்த சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடுவது.
மகா சங்கத்தையும்,படைக் கட்டமைப்பையும் மீறி இனவாதத்துக்கு எதிராக அரசாங்கத்தால் போராட முடியாது. தமிழ் நோக்கு நிலையில் இலங்கைத் தீவின் அழுக்கு என்பது இனவாதம்தான்.அந்த அழுக்கை அகற்றாத வரை இச்சிறிய தீவின் அரசியலைச் சுத்தமாக்க முடியாது. எனவே தமிழ் நோக்குநிலையில் இந்த அரசியல் ஆண்டும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத,தீர்வு கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கைகள் துளிர்க்காத ஒர் ஆண்டுதான்.
ஆண்டின் முடிவில் நாட்டைத் தாக்கிய புயல் பொருளாதாரத்தை நாசமாக்கியது. அதேசமயம் அரசாங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளைக் கடந்து செல்வதற்கு அல்லது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான கால அவகாசத்தை மேலும் பெற்றுக் கொள்வதற்கு, புயல் அரசாங்கத்துக்கு உதவியிருக்கிறது.ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே ஆண்டின் முடிவிலும் அரசாங்கம் பலமாக உள்ளது.ஆனால்,தமிழ் அரசியல்? சில நாட்களுக்கு முன்,முள்ளிவாய்க்கால் கிராமத்தையும் உள்ளடக்கிய கரைத்துறைப் பற்று பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கட்சிகள் அரசாங்கத்திடம் இழந்துவிட்டன.தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் ஒரு தோல்வியோடு முடியும் ஆண்டு?

