தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டத்தின் போது, பொலிஸாரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும், மக்கள் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமையையும் கண்டித்து வலி. வடக்கு பிரதேச சபையில் இன்று உணர்வுபூர்வமான எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நடந்தது என்ன?
கடந்த 21ஆம் திகதி தையிட்டி விகாரை முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் வேலன் சுவாமி மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சபையில் வெடித்த எதிர்ப்பு:
இன்று புதன்கிழமை தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற சபையின் விசேட அமர்வில், பொலிஸாரின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்து தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்களைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கறுப்புப் பட்டி அணிந்து கலந்து கொண்டனர்.
வாக்குறுதி அளித்து காலை வாரிய NPP?
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வின் போது, “தையிட்டியில் கட்டப்பட்டுள்ளது சட்டவிரோதமான கட்டடம் தான், இதற்கு எதிராக கட்சி பேதமின்றிப் போராடினால் நாமும் கலந்து கொள்வோம்” என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உறுதியளித்திருந்தனர்.
ஆனால், வாக்குறுதி அளித்த மூன்றாம் நாளே நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், அதே நேரத்தில் காங்கேசன்துறை கடற்கரையில் பொலிஸாருடன் இணைந்து ‘கிளீன் ஸ்ரீலங்கா’ சிரமதானப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். ஒருபுறம் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த வேளையில், மறுபுறம் NPP உறுப்பினர்கள் அதே பொலிஸாருடன் இணைந்து பணியாற்றியது சபையில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
உறுப்பினர்களின் கவலை:
தமது சபையைச் சேர்ந்த சக உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதைக் கூடக் கண்டிக்காமல் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மௌனம் காப்பது வேதனையளிப்பதாக ஏனைய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தையிட்டி விகாரை விவகாரம் நீண்டகாலமாக சட்டவிரோதக் கட்டுமானம் எனத் தமிழ் தரப்பால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் இந்த கைது நடவடிக்கை வடக்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Thaiyitti #ValikamamNorth #Protest #Jaffna #HumanRights #NPP #SriLankaPolice #BlackBandProtest #LocalGovernment #Justice #NorthernProvince

