Home இலங்கைநூறு கோடி மக்களின் எழுச்சி One Billion Rising – 2026

நூறு கோடி மக்களின் எழுச்சி One Billion Rising – 2026

by admin
பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்தலை ஆடுவோம்!
பாடுவோம்! கொண்டாடுவோம்!
“நூறுகோடி மக்களின் எழுச்சி“ எனும் உலகளாவிய செயல்வாதம் ஆனது ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 14ஆம் திகதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த எழுச்சியானது “வன்முறைகள் இல்லாத வாழ்தல் கொண்டாடப்பட வேண்டியது – பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்” என்ற தொனிப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது.
இவ்வுலகில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்க்கைக் காலத்தில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள்.
2012ஆம் ஆண்டின் உலக சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 700 கோடியாக இருந்துள்ளது. அந்தவகையில் கிட்டத்தட்ட பாதித்தொகையினராகிய மூன்று கோடிப் பெண்களில் நூறுகோடிப் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இதனை ஆய்வு செய்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணிலைவாதியான Eve Ensler என்பவரால் 2012இல் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் நூறுகோடி மக்களின் எழுச்சி முன்மொழியப்பட்டு, 2013ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஒரு உலகந்தழுவிய செயல்வாதமாக இது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
‘பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக எழுச்சிகொள்வோம், ஆடுவோம், பாடுவோம், கலைகளினூடாக மகிழ்வான வாழ்தலை உருவாக்குவோம்’ என்கின்ற அடிப்படையில் வருடா வருடம் இச்செயல்வாதக் கொண்டாட்டமானது நடைபெற்றுவருகின்றது. இலங்கையிலும் 2013ஆம் ஆண்டிலிருந்து இவ்வெழுச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், பால்-பால்நிலை பல்வகைமையினருக்கும், பூமிக்கும், இயற்கைக்கும் வன்முறை செய்யாத வாழ்தலைக் கொண்டாடுவோம் எனும் அடிப்படையில் இலங்கையில் பல்வேறு பாகங்களில் நூறுகோடி மக்களின் எழுச்சியினை வன்முறைகளற்ற வாழ்தலைக் கட்டியெழுப்பும் பெண்நிலைவாதிகள், சமூக மாற்றச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் போன்றோர் முன்னெடுத்து வருகின்றனர்.
“பெண்கள் – பூமி – சிறுவர்கள் – பால் பால்நிலை பல்வகைமையினர் முதலியோருக்கு எதிரான வன்முறைகள் இல்லாத வாழ்தல் அழகானது, ஆரோக்கியமானது., அன்பினாலோர் உலகம் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் பெண்கள் இணைந்து இசைக்கும் நீதிக்கான பறை, வன்முறையற்ற வாழ்தலுக்கான ஓவியக் கண்காட்சிகள், ஊர்வலங்கள், வீதி நாடகங்கள் எனப் பல்வேறு கலைசார் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல கொரோனா தொற்றுக் காலத்திலும், பொருளாதார நெருக்கடிக் காலத்திலும் பெண்களுக்கு ஏற்பட்டிருந்த அதிகப்படியான வீட்டு வன்முறைகளுக்கு எதிராக இந்நூறு கோடி மக்களின் எழுச்சி நாளில் பல செயற்பாடுகள் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்நெருக்கடி காலங்களில் உள்ளூர் விவசாயம் சார்ந்த அறிவினைத் தேடிப்பெற்று அதனைத் தங்கள் தங்கள் வீடுகளில் உற்பத்தி செய்தலும், நண்பர்களுக்கு பகிர்தலும் எனும் செயற்பாடும் நடைபெற்றது.
2013ஆம் ஆண்டு முதல் இவ்வெழுச்சியானது நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு தொனிப்பொருளில் நடைபெற்று வந்திருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழுவினாலும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினாலும், வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்களாலும், ஏனைய மாவட்டங்களில் உள்ள பெண்கள் அமைப்புகளாலும் வருடாவருடம் ‘விடுதலைக்காய், வன்முறைகளற்ற வாழ்தலுக்காய் எழுச்சிகொள்வோம்!’ என்ற தொனிப்பொருளில் பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆணாதிக்கச் சிந்தனைகளால் உருவாக்கப்பட்டுள்ள ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், வணிகமயமாக்கல் சிந்தனைகள், பன்மைத்துவச் சிந்தனைகளற்ற பாடசாலைக் கல்விமுறைகள், பரீட்சை மையக் கற்றல்கள், வறுமை, ஒடுக்குமுறை, சுரண்டல்கள், பிரிவினைகள், கட்டுப்படுத்தல்கள், பேராசை, தனிமனித வாழ்தல், பல்தேசியக் கம்பனிகளின் அதிகாரங்கள், பிறரில் தங்கிவாழ்தல் போன்றவற்றில் இருந்து விடுதலை பெற்று எங்கள் அறிவிலும் திறனிலும் பெருமைகொண்டு நாங்கள் எங்கள் வாழ்தலுக்காக எழுச்சிகொள்வோம்!, விடுதலைக்காய் எழுச்சி கொள்வோம்!,
ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்!, குறிப்பாக எமது உடல், எமது பூமி, எமது எதிர்காலம் ஆகியவற்றுக்காக எழுச்சி கொள்வோம் என்று இவ்வருட நூறு கோடி மக்களின் எழுச்சி கொண்டாடப்படுகின்றது.
இவ்வருடமும் மாசி மாதம் பதின்நான்காம் திகதி உலகம் முழுவதும் நூறுகோடி மக்களின் எழுச்சியைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையின் மட்டக்களப்பில் சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு, மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு மற்றும் வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள், நிறணி ஓவியர் குழு ஆகியோர் இணைந்து, கடந்த வருடம் ஜப்பசி மாதம் முதல் சிறுவர்கள், பல்கலைக்கழக மற்றும் உயர்தர பாடசாலை மாணவர்கள், இளம் பெண்கள் மற்றும் ஆண்கள், இளம் ஓவியர்கள், மாதர் சங்க பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் ஆகியோருடனான வதிவிட பயிற்சிப்பட்டறைகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள், கலைச்செயற்பாடுகள், நிகழ்நிலைக் கண்காட்சிகள் போன்றவற்றை மட்டக்களப்பின் நாவலடி, திருப்பெருந்துறை, பாலமீன்மடு, வந்தாறுமூலை, சீலாமுனை ஆகிய கிராமங்களிலும் புத்தளம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் நடாத்தியுள்ளனர்.
இச்செற்பாடுகள் யாவும் ‘சமூக மாற்றத்திற்கான கலைகள்‘ எனும் கருப்பொருளினூடாக வன்முறைகள் மற்றும் ஏகாதிபத்தியத்திலிருந்து எங்களை நாங்களே விடுவித்துக்கொள்வதற்கான வழிமுறைகளை கலைகளுக்கூடாக உருவாக்குதலை மையமாகக் கொண்டமைந்தவையாகும்.
மேலும் கடந்த வருடங்களைப் போன்று 01.01.2026 அன்று புதிதாக மலர்ந்த 2026ஆம் ஆண்டு வன்முறையற்ற ஆண்டாக அமைய செயற்பாட்டாளர்களும் சிறுவர்களும் இணைந்து மட்டக்களப்பு நகரில் மேற்கொண்ட நடைபவனியின் போது (தாண்டவன்வெளி-காந்திப்பூங்கா) ஆங்காங்கே நின்ற பொதுமக்களுக்கு பூக்கள் கொடுத்து வன்முறையற்ற வாழ்விற்கான புதுவருட வாழ்த்துகளை தெரிவித்து, பறை இசையுடன் செயல்வாதப் பாடல்களைப் பாடி இவ்வருடத்திற்கான நூறுகோடி மக்களின் எழுச்சியின் ஆரம்ப நிகழ்ச்சிகளிற்கு வலுசேர்த்தனர்.
அத்தோடு இந்நூறு கோடி மக்;களின் எழுச்சி நாளை முன்னிட்டு திருகோணமலையில் E-Wings பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுயாதீன மையத்தினால் ‘சமத்துவமான நாட்டை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் பட்டத்திருவிழாவை நடத்தியதுடன் சமூகத்திற்காக சேவையாற்றும் பெண்களுக்கு ‘அவள் குரல் அவள் உரிமை’ எனும் விருதும் வழங்கி பெருமைப்படுத்தினர்.
இந்நூறு கோடி மக்களின் எழுச்சியை மாசி மாதம் 14ஆம் திகதியும், அதற்கு முன்னரும் இலங்கையின் பல்வேறு செயற்பாட்டாளர்கள் தத்தமது இடங்களில் கொண்டாடுவார்கள். அத்தோடு கடந்த ஜந்து வருடங்களாக இலங்கையின் பத்து மாவட்டங்களில் இருக்கும் பல பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மாற்றச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து, ஒரே இடத்தில் கூடி, இந்நூறு கோடி மக்களின் எழுச்சி நாளை கோலாகலமாக சமூக மாற்றக் கருத்தியல்களுடனும், பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைந்தெறியும் சிந்தனைகளுடனும் கொண்டாடியுள்ளனர்.
அந்தவகையில் இலங்கையில் பல மாவட்டங்களிலும் உள்ள பெண்கள் அமைப்புகளான, அம்பாறை-அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கு, அம்பாறை-அக்கரைப்பற்று தேன் அருவி பெண்கள் அமைப்பு, திருகோணமலை E-Wings பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுயாதீன மையம், அநுராதபுரம் சாவிஸ்த்ரி கிராம மட்ட பெண்கள் அமைப்பு, கொழும்பு சாவிஸ்த்ரி மாவட்ட பெண்கள் அமைப்பு, புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம், கட்டுநாயக்கா Stand up Movement Lanka, முல்லைத்தீவு ஆளுமை-நிஷ பெண்கள் வலையமைப்பு, யாழ்ப்பாணம் வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கம், மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம், ஹற்றன் சமூக நலன்புரி மன்றம், கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம், மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாட்டு நண்பர்கள் குழு, மட்டக்களப்பு சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு, மட்டக்களப்பு வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள் ஆகியோர் இணைந்து 300இற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களாக நூறுகோடி மக்களின் எழுச்சியை ஆடிப்பாடிக் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த ஜந்து வருடங்களாக மன்னார், நுவரெலியா, முல்லைத்தீவு, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவரும் இணைந்த எழுச்சி இடம்பெற்றது.
அதுபோன்று இந்த வருட, இணைந்த எழுச்சியை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாலமீன்மடு எனும் வாவி சூழ்ந்து இயற்கை அழகு செறிந்து நிறைந்த கிராமத்தில், அக்கிராம மக்களுடனும், மட்டக்களப்பு நகர் வாழ் மக்களுடனும், ஏனைய பத்து மாவட்டங்களிலிருந்து வருகின்ற 20 பெண்கள் அமைப்புகளுடனும், சமூக மாற்றச் செயற்பாட்டாளர்களுடனும் இணைந்து, பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக குரல் கொடுக்கும் மிகப் பெரியளவிலான மக்களின் எழுச்சியை – குறிப்பாகப் பெண்களின் எழுச்சியை எதிர்பார்த்து மட்டக்களப்பு சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு, மூன்றாவது கண் உள்ளூர் அறிவுதிறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு, மற்றும் வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள் ஆகிய நண்பர்கள் குழு இணைந்து இந்நூறு கோடி மக்களின் எழுச்சியை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைப்புச் செய்கின்றது.
இதற்கு பாலமீன்மடு லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகத்தினர் ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருந்து செயற்படுகிறார்கள் என்பது, இதுவரை சமூக மாற்றச் செயற்பாட்டாளர்களும் பெண்கள் அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த உலகளாவிய எழுச்சியை கிராம மக்களுக்கு இடையில் – நமது சமூகங்களுக்கிடையில் கொண்டு செல்லும் மற்றையதொரு நெகிழ்ச்சியான விடயமாகும். அந்தவகையில்
 14.02.2026 அன்று பி.ப 4.00 மணிக்கு லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழக மைதானம், பாலமீன்மடு, பார்வீதி, மட்டக்களப்பிற்கு, பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொரு மனிதரையும் எழுச்சியை ஒருங்கிணைக்கும் நண்பர்கள் குழு அழைத்து நிற்கின்றது.
 இவ்வெழுச்சியை முன்னிட்டு வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக்கலைஞர்கள் ‘வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் தமது காண்பியக் கண்காட்சியைக் ‘கூடம், புதிய வீதி, மட்டக்களப்பில் மாசி மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை காலை 9.00 – மாலை 6.00 வரை நடத்துகின்றனர்.
சமதை பெண்நிலைவாத நண்பிகள், மட்டக்களப்பு
01.02.2026
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More