218
உண்மையான அறத்தின் பாற்பட்டு மேற்கொள்ளப்படவேண்டிய உணவு தவிர்ப்பு போரட்டம், மாணவர்கள் சிலரின் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது, கலைப்பீடமாணவர்கள் இச்சமூகம் தொடர்பில் காட்டிவரும் பொது அக்கறைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும்.என கலைப்பீடச் சபை வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் விதிக்கப்பட்ட வகுப்புத் தடைக்கெதிராக கலைப்பீட மாணவர்கள் உணவு தவிர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (31) மாலை கலைப்பீடச் சபையினர், யாழ்.பல்கலைகழகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
யாழ்.பல்கலைகழக கலைப்பீடத்தை சேர்ந்த 13 மாணவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் விதிக்கப்பட்ட தற்காலிகமான வகுப்புத் தடைக்கெதிராக கலைப்பீட மாணவர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு தவிர்ப்பு நடவடிக்கையைக் கவனத்திற் கொண்டு, அந்நடவடிக்கையின் விளைவாக எவருக்கும் தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது எனும் ஒரேநோக்கத்திற்காக, அம் மாணவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக வகுப்புத்தடையை முழுமையான ஒழுக்காற்று விசாரணையின் இறுதி அறிக்கை வெளிவரும் வரையில் இடைநிறுத்துவதற்கு கலைப்பீடச் சபை பல்கலைக்கழகதுணைவேந்தருக்குப் பரிந்துரைசெய்துள்ளது.
அதேவேளை, மேற்படி மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிய நிலைமைகளை சமூகத்தினருக்கும், பெற்றோருக்கும் கலைப்பீடமாணவர்களுக்கும் எடுத்துக் கூறவும் கலைப்பீடச் சபை தீர்மானித்துள்ளது.
கடந்தமார்ச் மாதம் 11ம் திகதி புதுமுகமாணவர்களுக்கு இரண்டாம் வருடகலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வுக்கு முன்னாயத்தமாக பல்கலைக்கழக வளாகத்தில் 10ம் திகதியன்று மாலை கூடிய மாணவர்கள் சிலர் மது போதைக்கு ஆளாகியிருந்ததுடன் மேற்படிநிகழ்வை கண்காணிப்பதற்காக சம்பவ இடத்தில் கடமையிலிருந்த சிரேஸ்ட மாணவ ஆலோசகர், மாணவ ஆலோசகர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்களை நோக்கி தகாதவார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்தும் அநாகரிகமானமுறையிலும் நடந்துகொண்டனர்.
அத்தோடு, அனுமதி வழங்கப்பட்ட நேரத்தினையும் கடந்தும் மாணவ ஆலோசகர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்புஉத்தியோகத்தர்களின் வழிநடத்தலையும் செவிமடுக்காது, அவற்றினை உதாசீனம் செய்யும் விதமாக நடந்துகொண்டனர்.
மேற்படி மாணவர்களில் சிலர் ஈருருளிகளை மிக வேகமாக விரிவுரையாளர்களை நோக்கி செலுத்தியும் அவமதிக்கும் வண்ணமும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விஞ்ஞானபீட அலுவலகத்தின் வாயிற் கதவும் மோட்டார் சைக்கிள்களால் உதைக்கப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தெரியப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் சரிவர மேற்கொள்ள முடியாதவாறு இடையூறுகள் விளைவிக்கப்பட்டன.
இதேவேளை, குறித்த சம்பவங்கள் நடைபெற்றவேளையில், அன்றிரவு விஞ்ஞானபீட இரசாயனவியல் ஆய்வுகூடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் பலவும் அடித்துநொறுக்கப்பட்டன. இந்த ஆய்வுகூடத்தில் பல இலட்சக்கணக்கான பெறுமதியான,ஆபத்து விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் விஞ்ஞானபீடாதிபதியும் துணைவேந்தரிடம் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்ந்தும் அசம்பாவிதங்களும் முறைகேடானசெயற்பாடுகளும் இடம்பெறுவதைத் தவிர்க்கும் நோக்குடன், உரிய பீட அதிகாரிகள் மற்றும் மாணவஆலோசகர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருடனான ஆலோசனையின் பின்னர், புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுக்கான அனுமதியை இரத்துச்செய்து அறிவித்தல் விடுத்தார்.
இது பற்றி கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாகக் குழுவினருக்கும் நேரடியாக உரியமுறையில் அறிவிப்பு வழங்கப்பட்டது.இந்த அறிவிப்பினையும் மீறி சம்பந்தப்பட்ட ஏனைய மாணவர்களுக்கு துணைவேந்தரின் அறிவிப்பினை எடுத்துச் சொல்லாது, வரவேற்பு நிகழ்வினை நடாத்த கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் முனைந்தனர்.
இந்த சமயத்திலும் நிகழ்வை ஒத்திவைக்குமாறும், ஏற்பாடு செய்யப்பட்ட உணவை அருந்திவிட்டு மாணவர்களை வீடுசெல்ல அனுமதிக்குமாறும் கலைப்பீடாதிபதி ,பதிவாளர், மாணவ ஆலோசகர்கள், விரிவரையாளர்கள் நேரடியாக விநயமாக எடுத்துக் கூறியும், அந்தவேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அலட்சியமான முறையில் எதிர்கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில், நிகழ்வினை இரத்துச் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துடன் ஒத்திசைந்ததாக, அநாவசிய குழப்பங்களைத் தவிர்க்கும் வண்ணம் மின்சாரவிநியோகம் குறுகிய கால நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டது. ஆனால், மாணவர்கள் சிலர் வெளியிலிருந்து மின் பிறப்பாக்கி ஒன்றை எவ்வித அனுமதியுமின்றி தனிப்பட்ட வாகனமொன்றில் உட்கொண்டு வந்துநிகழ்வைத் தொடர்ந்து நடாத்தத் தலைப்பட்டனர்.
மாணவர்களின் அநாவசிய குழப்பம் விளைவிக்கும் நிகழ்வுகளைத் தவிர்க்கும் முகமாகவும, அவர்களது வெளியேற்றத்தை உறுதிப்படுத்தவும் மிகக்குறுகியகாலத்திற்கு நீர்விநியோகமும் தற்காலிகமாகத்துண்டிக்கப்பட்டது .
வெளியாரின் உள்நுழைவைத் தடுக்கும் வண்ணம், பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் வளாகத்தின் முகப்பு வாயில் தற்காலிகமாக மூடப்படுவதற்கும் உத்தரவிடப்பட்டது. வளாகத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேறிச்செல்ல வசதியாக இந்த நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு அது தொடர்பான அறிவித்தலும் வழங்கப்பட்டது.
ஆனால், மாணவர்கள் வெளியேறிச் செல்லாது தடுக்கப்படும் நோக்குடன் சிரேஸ்ட மாணவர்கள் சிலரால் அந்த நுழைவாயில் பலவந்தமாக மூடப்பட்டது. இந்த நிகழ்வு பற்றி பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினரின் உதவிக்கானஅழைப்பு விடுக்கப்பட்டது.
கால தாமதமாகவே வந்த காவல்துறையினருக்கு முன்னதாக மாணவர்களால் வாயில் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் வெளியேறிச் சென்றனர்.
மேற்படி சம்பவங்களை மிகக்கவனமாக ஆராய்ந்த பின்னர், பல்கலைக்கழக விதிகளை மீறியும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் புறந்தள்ளியும் செயற்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கான அறிவிப்பு துணைவேந்தரால் விடுவிக்கப்பட்டது.
கலைப்பீட கற்றல் செயற்பாடுகள் சட்டத்துறை, இராமநாதன் நுண்கலைக்கழகம் தவிர்ந்ததாக இடைநிறுத்தம் செய்யப்பட்டன. விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது.சம்பவங்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள், மாணவ ஆலோசகர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, 14.03.2017 அன்று ஒழுக்காற்று விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
குறித்த சம்பவங்களில் ஈடுபட்டு இனங்காணப்பட்ட மாணவர்களையும், நேரில் கண்ணுற்ற விரிவுரையாளர்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் விசாரணைசெய்த ஒழுக்காற்று விசாரணைக்குழு தனது பூர்வாங்க அறிக்கையை 27.03.2017 அன்று துணைவேந்தரிடம் வழங்கியது. அதன்படி, முகத்தோற்றம் அளவில் ஒழுக்கவிதிகளை மீறியதாக இனங்காணப்பட்ட 13 கலைப்பீடமாணவர்கள் உள்ளடங்கலாக 15 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இரண்டு மாணவர்களுக்கு எதிரான பாரதூரமான முகத்தோற்ற அளவிலான ஒழுக்க விதி மீறல் தொடர்பான ஆதாரங்கள் இனங்காணப்படாத நிலையில், அவர்களுக்கு எதிரான இடைக்கால நடவடிக்கை எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. மேற்படி வகுப்புத்தடையானது முழு விசாரணையும் நடைபெற்று முடியும் வரையான தற்காலிக இடைக்கால நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுமான அளவு விரைவில் முழுமையான விசாரணைகளும் பூர்த்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது, அனைத்தும் பல்கலைக்கழகங்களாலும் பின்பற்றப்படும் ஒழுக்க உப விதிகளின் பால் அமைந்ததும் இயற்கைநீதித் தத்துவங்களுக்கு உட்பட்டதுமான நடவடிக்கையும் ஆகும்.
ஒழுங்கு விதிகளை மீறிய சில மாணவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பொது வெளியில் வெளியிட்டு, தாம் இழைத்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்காமலும் அவற்றை மூடிமறைத்தும், ஏனைய ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு குந்தகம் விளைவித்தும் கற்றல் செயற்பாடுகளை முடக்கியும் வைத்திருப்பது குறித்து கலைப்பீடச் சபை ஆழ்ந்த கவலை கொள்கிறது.
உண்மையான அறத்தின் பாற்பட்டு மேற்கொள்ளப்படவேண்டிய உணவுதவிர்ப்பு போரட்டம், மாணவர்கள் சிலரின் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது, கலைப்பீடமாணவர்கள் இச்சமூகம் தொடர்பில் காட்டிவரும் பொது அக்கறைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும்.
குறிப்பாக, மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கைகளை மாணவர் உரிமைகளுக்கு எதிரானது எனக் காட்டமுயற்சிப்பதும் துரதிஸ்டவசமானது.கலைப்பீடச் சபை, கலைப்பீடமாணவர்களின் உரிமைகளை மதிக்கும் அதேவேளை, அவர்களின் தார்மீகப் பலமானது அவர்களுடைய ஒழுக்க நடவடிக்கைகளில் தங்கியுள்ளது எனவும் கருதுகிறது.
இதனை கலைப்பீட மாணவர் சமூகமும் தமிழ்ச் சமூகமும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதும், கலைப்பீடமாணவர்கள் அனைவரும் கற்றல் நடவடிக்கைகளுக்குத் திரும்பவேண்டும் என்பதும் கலைப்பீடச் சபையின் விநயமானவேண்டுகோளாகும். என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Spread the love