முல்லைத்தீவு கேப்பாபுலவில் 279 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வைகாசி 15ஆம் திகதிக்கு குறித்த காணிகள் விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் மீள்குடியேற்ற அமைச்சருக்கும் இடையில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் கேப்பாபுலவில்உள்ள 248 ஏக்கர் அரச காணிகளும் சீனியாமோட்டையில் 31 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளன.
இதேவேளை ஒரு மாத காலப்பகுதியில் 198 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன் மொத்தமாக 468 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 32 ஆவது நாளாகவும் கேப்பாபுலவில் நில மீட்புக்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. 128 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம்இ சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள்இ வீடுகள்இ பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.