195
தற்போது கனடா தனது ராணுவச் செலவினங்களில் சுமார் 75% அமெரிக்க நிறுவனங்களிடமே செலவிடுகிறது. இதனை மாற்றி, அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்பு கொள்முதலில் 70% பங்கை கனடிய நிறுவனங்களுக்கே வழங்க பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அமெரிக்காவின் மாறிவரும் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் உலகளாவிய பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அமெரிக்கா மீதான ‘அதிஅதிகப்படியான’ சார்பைத் தவிர்க்கவும் கனடா இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.
கனடா தனது ராணுவக் கொள்கையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை தனது பாதுகாப்புத் தேவைகளுக்காகவும், ஆயுதக் கொள்முதலுக்காகவும் அமெரிக்காவை அதிகளவில் நம்பியிருந்த கனடா, இனி “Build, Partner, Buy” (உள்நாட்டிலேயே உருவாக்கு, கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படு, தேவையெனில் வாங்கு) என்ற புதிய கொள்கையின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 180 பில்லியன் டாலர் ஆயுதக் கொள்முதலுக்காகவும், 290 பில்லியன் டாலர் ராணுவக் கட்டமைப்பு வசதிகளுக்காகவும் செலவிடப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கனடாவில் சுமார் 1,25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் கட்டுதல், விண்வெளித் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் (Drones), வெடிமருந்துகள் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் கனடா சுயமாக இயங்க முடிவு செய்துள்ளது.
2026-ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதத்தை ராணுவத்திற்காகச் செலவிட வேண்டும் என்ற நேட்டோவின் இலக்கை அடையவும் கனடா உறுதிபூண்டுள்ளது.
குறிப்பாக, ஆர்க்டிக் (Arctic) போன்ற பகுதிகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவும், நவீன போர் முறைகளுக்குத் தேவையான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் கருவிகளைத் தாங்களே உருவாக்கவும் கனடா திட்டமிட்டுள்ளது.
Spread the love

