இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் கண்டனம் தெரிவித்துள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டு சில நாட்களுக்குள்ளேயே இவ்வாறு பதவி வழங்கப்பட்டமையானது ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயலாகும் என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.
இந் நடவடிக்கையானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமன்றி தேசிய அரசின் வாக்குறுதியை நம்பிய சர்வதேச சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட மிகவும் மோசமான துரோகம் எனவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இலங்கையின் 28ம் இராணுவ ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 58ம் படையணியின் கட்டளைத் தளபதியாக சவேந்திர சில்வா கடமையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.