யாழில் திருமண வீட்டில் இரவு வேளை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் ரொக்க பணமும் களவாடி சென்று உள்ளனர். யாழ்.புன்னாலைக் கட்டுவான் வடக்கில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் வீட்டிலையே இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்று உள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குறித்த வீட்டில் மகளின் திருமண நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்று இருந்தது. அன்றைய தினம் இரவு வீட்டில் இருந்தோர் வீட்டின் கதவுகளை பாதுகாப்பாக மூடாது நித்திரைக்கு சென்று உள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடர்கள் வீட்டினுள் புகுந்து 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் ரொக்க பணமும் களவாடி சென்று உள்ளனர். மறுநாள் காலை வீட்டார் கண் விழித்து பார்த்த போதே நகைகள் பணம் திருட்டு போனது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து வெள்ளிக்கிழமை சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல் துறையினர் சனிக்கிழமை காலை திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மோப்ப நாய்களுடன் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மோப்ப நாய் அடையாளம் காட்டியதன் பிரகாரம் இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.