மட்டக்களப்புவாழ் மலையகமக்களின் நல்லிணக்கத்திற்கான வலியுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மட்டகளப்பு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க செயலணிக்குழுவின் அமா்வின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இது அவா்கள் தங்களுடைய அறிக்கையில் தெரிவித்துள்ள விடயம் வருமாறு
முப்பது வருட யுத்த அனுபவத்தின் பின்னர் இன்று நல்லிணக்கத்தின் அவசியம் பற்றிபேசப்படுகின்றது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகாவிடின் நாட்டில் சமாதானம் ஒருபோதும் நிலைக்காது. சமாதானம் நிலைக்கவேண்டுமாயின் அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இப் பின்புலத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துவரும் மலையக தமிழர்களாகிய நாம், ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து சமஉரிமையை அனுபவிக்கும் சமூகமாக வாழவிரும்புகின்றோம் .நல்லிணக்கத்திற்கான முயற்சிகளின் போதுநாம் முகம் கொடுத்துவரும் ஒதுக்குதலை நீக்க ஆவண மேற்கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
மட்டகளப்பு மாவட்டத்தில் புரங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் தனித்துவமாக மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் குறிப்பிட்டுக் கூறுவதாயின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று செயலகபிரிவின் அநேகமான புரங்களில் கூடுதலாக மலையகத்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர். ஏனைய கிராமமக்களுடன் ஒப்பிடுகையில் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கையின் போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே நல்லிணக்க முயற்சியன் போது எமது சமூகம் சமவுரிமைப் பெற்று சுபீட்சமாகவும் வாழ வழிவகை செய்யவேண்டும் எனக்கோருகின்றோம்.
1958 காலமுதல் தொடர்ச்சியாக இடம்பெற்ற இனக்கலவரங்களினால் பெரும் இழப்புகளுக்கு முகம் கொடுத்து மலையக மக்கள் இம்மாவட்டதிற்கு இடம்பெயர்ந்து புரம் எனும் கிராமங்களில் குடியமர்ந்த மலையகமக்கள் யுத்தகாலத்தில் பாரிய உயிரிழப்புகளையும் சந்தித்தனர், பாரிய உயரிழப்புகளையும் உடைமையிழப்புகளையும் சந்தித்த இம்மக்கள் பின்வரும் விடயங்களில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டுவருகின்றனர்.
அரசியல் பிரதிநிதித்துவம்
எமது மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால் எமக்கு அபிவிருத்திதிட்டங்கள் கிடைப்பதில்லை. எனவே உள்ளூராட்சிகளில் எமது பிரதநிதித்துவம் உறுதிசெய்யும் வகையில் ஆவணமேற்கொள்ளவேண்டும்.
ஓரங்கட்டப்படுதல்
கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதிகளில் எமது சமூகத்திற்கான உரியபங்கு வழங்கப்படுவதில்லை. எனவே இவ்வாய்ப்புகள் உறுதிபடுத்தப்படல் வேண்டும். வாழ்வாதாரம் – எமது வாழ்வாதாரம் விவசாயத்திலேயே தங்கியுள்ளது. ஆனால் அதனை விருத்திசெய்து கொள்வதற்கு எவ்வித வளங்களும் வழங்கப்படவில்லை.
உதாரணம்: நீர்ப்பாசனம் அற்ற இடங்களில் வாழ வைக்கப்பட்டுள்ளதோடு, எம்மவர்களுக்கு நீர்ப்பாசனகாணிகளும் வழங்கப்படவில்லை.
குடிநீர்
நாங்கள் குளங்களை அண்டி வாழந்தபோதும் எமக்குகுடிநீர் வசதிசெய்து கொடுக்கப்படவி;ல்லை
காணி
அரசாங்கத்தால் பகிா்ந்தளிக்கப்பட்ட மற்றும் நாங்களாவே குடியமர்ந்துக் கொண்ட காணிகளுக்கு உரிய உறுதிப்பத்திரம் இல்லை. ஏனையவருக்கு வழங்குவதுபோல் எமக்கும் காணி உறுதிவழங்கவேண்டும் இத்திட்டத்தில் விவசாயத்தை மேற்கொள்ளமுடியாதுள்ளதோடு,காட்டுவிலங்குகளின் தொல்லைகளும் காணப்படுவதால் பொருளாதாரத்தில் மேன்மையடையமுடியாதுள்ளது.
கல்வி
எம் புரங்களில் பலபாடசாலைகள் காணப்பட்டாலும் அவற்றில் மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர் ஆளணியும்,போதியவளப்பகிர்வும் இல்லை. இதனால் கல்வியில் பின்தங்கிய நிலையே தொடர்ந்து காணப்படுகின்றது..
உட்கட்டுமானம்
பாதைகள், கட்டடங்கள், போக்குவரத்து, வீடு முதலிய உட்கட்டுமானவசதிகள் பகிரப்படும் போது நாம் வாழும் புரங்கள் கிராமங்கள் ஒரங்கட்டப்படுகின்றன
தொழில்வாய்ப்பு
கல்வியால் பின்தங்கிய சூழ்நிலைகள் காணப்படுவதால் இளையசமூகத்தினருக்குவேலைவாய்ப்பில் போட்டியிட முடியாதுள்ளது. ஆயினும் குறைந்தபட்ச கல்வித் தகைமையைக் கொண்டுள்ளோருக்கும் அரசவேலைவாய்ப்பின் போது ஓரங்கட்டப்படுகின்றது.
நிறைவு
மட்டகளப்பில் வாழும் மலையகமக்கள் ஏனைய மக்களைப்போல் தமது பொருளாதாரத்தையும் ,கலாசாரத்தையும் ,அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பேணிப் பாதுகாத்து வாழும் வகையில் நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்படவேண்டும். என அவா்கள் தங்களுடைய முன்மொழிவுகளில் தொிவித்துள்ளனா்.