புத்தளம் கடயமோட்டை பகுதியில் நேற்று (2026 மார்ச் 05) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடயமோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய சஞ்சன மற்றும் அதே பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய திலிப் மதுசங்க ஆகிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
மாணவர்கள் வீதியில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த லொறி ஒன்று அவர்கள் மீது மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலேயே ஒரு மாணவர் உயிரிழந்ததுடன், பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய லொறிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தினாரா என்பது குறித்த மருத்துவப் பரிசோதனைக்காகச் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புத்தளம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

