Home இலங்கை“மணல் மாபியாக்களின் பிடியில் வடக்கு: சுரங்கப் பணியகத்தின் மெத்தனப் போக்கைச் சாடினார் ஆளுநர் வேதநாயகன்!”

“மணல் மாபியாக்களின் பிடியில் வடக்கு: சுரங்கப் பணியகத்தின் மெத்தனப் போக்கைச் சாடினார் ஆளுநர் வேதநாயகன்!”

by admin
மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடம் இருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்   தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராக பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கான புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்கும் நோக்கில் விசேட உயர்மட்ட கலந்துரையாடல், வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்   தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பாக நேரில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க இக்கலந்துரையாடலில் விசேடமாக பங்கேற்றிருந்தார். இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுநர்  இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
‘மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கிறது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளன. இந்நிலையில், சாதாரண மக்கள் தங்கள் நாளாந்த தேவைகளுக்கு கூட மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடம் இருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை .
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் எடுத்து வருவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு, நடைமுறையில் கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக அகழப்படும் மணலை அந்த அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி ஏற்றி வருகின்றனர்.
மேலும், அரச நிறுவனங்கள் ஊடாக மணல் விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தால் அதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. ஆனால், தனிநபர்களுக்கு பணியகத்தால் உடனடியாக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறைகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.  மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் விசேட குழுக்கள் அமைத்து, அக்குழுக்கள் ஊடாகவே இனி அனுமதிகளை வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்,’ என ஆளுநர் மிகக் காட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
இவ் விசேட கூட்டத்தில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர், பிரதி காவல்துறை மா அதிபர்கள், ஐந்து மாவட்டங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், நீர்ப்பாசன மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனவளத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் சங்கப் பிரதிநிதிகள் எனப பலரும் கலந்து கொண்டனர்.
 
#NorthernGovernor #SandMafia#JaffnaSandPrice #Vedanayagan  #IllegalMining
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More