புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணையினை முன் மொழிந்தார்.
வடமாகாண சபை மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணை சபையில் முன் மொழியப்பட்டது.
போராளிகளின் தரவுகளை சேகரிக்கின்றோம். – சுகாதார அமைச்சர்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ,
தமது அமைச்சின் கீழ் முன்னாள் போராளிகள் தொடர்பிலான தகவல்களை சேகரித்து வருகின்றோம். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்த போராளிகளின் மருத்துவ தரவுகள் சேகரிப்படுகின்றது.
அதாவது அவர்கள் என்ன நோய்க்காக சிகிச்சை பெற்றார்கள் , உயிரிழந்த பின்னரான உடற்கூற்று பரிசோதனை அறிக்கை என்பவற்றை சேகரித்து அதனை சட்ட மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் ஆராய நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
அதேபோன்று புற்றுநோய் சம்பந்தமான வைத்திய நிபுணர்கள் நச்சு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று எவ்வாறான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டால் , அவற்றை கண்டது பிடிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளை பெறவுள்ளோம்.
புனர்வாழ்வு முகாமில் ஏற்றப்பட்ட ஊசி , மற்றும் இரசாயன உணவு வழங்கப்பட்டமை தொடர்பான குற்ற சாட்டின் உண்மைத்தன்மையை எவ்வாறு கண்டறியலாம் அதற்கு எவ்வாறான , என்ன பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆலோசித்து பரிசோதனையை மேற்கொள்ள உள்ளோம். என தெரிவித்தார்.
புனர்வாழ்வின் பின்னர் ஒருவருக்கு இடுப்புக்கு கீழ் இயக்கம் இல்லை. – அனந்தி சசிதரன்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் ,
தடுப்புக்கு போக முதல் இயங்கியவர் தடுப்பினால் வெளியே வரும் போது இடுப்புக்கு கீழே இயக்கமற்றவராக வந்தார். எனவும் , போராளிகளின் தடுப்பு முகாம்களில் ஊசி போட்டவர்கள் அரசுடன் சேர்ந்து இயங்கிய சில தமிழ் வைத்தியர்கள் எனவும் , இந்த மருத்துக்களை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தான் கொண்டு வந்தார்கள் எனவும் எனக்கு சில முறைப்பாடுகள் கடந்த காலங்களில் கிடைத்தன என தெரிவித்தார்.
கட்டட திறப்பு விழாவுக்கு பணத்தினை செலவழிக்காது, போராளிகளின் மருத்துவ பரிசோதனைக்கு செலவழியுங்கள். – தவநாதன்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன்,
போராளிகளுக்கு தடுப்பு முகாமில் ஏதோ நடந்துள்ளது என்பது முன்னரே மக்களுக்கு தெரிந்து உள்ளது. புலிகளின் முக்கிய பெண் போராளி ஒருவர் உயிரிழந்த போது இந்த விடயம் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டன.
ஆனாலும் , அது தொடர்பில் நாம் எவரும் கவனம் செலுத்தவில்லை. ஆணைக்குழு முன்பாக போராளி ஒருவர் சாட்சியம் அளித்தது ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னரே நாம் தற்போது அதனை பேசுகின்றோம்.
எனவே இனியும் காலம் கடத்தது போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பணப்பற்றாக் குறை இருந்தால் , மாகாண சபையால் கட்டட அடிக்கல் நாட்டு விழா , திறப்பு விழா , என விழாக்களுக்கு பணத்தினை செலவழிக்காது அந்த பணத்தினைக் கொண்டு , முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தடுப்பூசி போடப்பட்ட பதிவேடு சிகிச்சை பெற்றவரின் கைகளில் கொடுக்கப்பட்டதா ? குணசீலன் கேள்வி.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் குணசீலன் ,
மருத்துவ சட்டத்தின் பிரகாரம் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது என்ன சிகிச்சை என்று கூறியே சிகிச்சை அளிக்க வேண்டும். அத்துடன் , சிகிச்சைக்கான அனுமதியினை சிகிச்சை பெறுபவரிடம் பெறவேண்டும்.
உளவியல் சிகிச்சை பெற்றால் கூட அதற்கு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புனர்வாழ்வு முகாமில் தடுப்பூசி போடப்பட்டு இருந்தால் அதற்கு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். அதற்கான பதிவேடு சிகிச்சை பெற்றவரின் கைகளில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அவற்றினை நாம் பெற்று ஆராய்வதன் மூலம் சில உண்மைகள் புலப்படும் என தெரிவித்தார்.