மட்டக்களப்பு மாவட்டத்தில் “வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற தொனிப்பொருளை நாதமாகக் கொண்டு 2026ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை புதிய வீதியிலுள்ள கலைக்கூடம் எனும் இடத்தில் காண்பியக் கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது. கண்காட்சியை அலங்கரித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு படைப்புகளும் ஒவ்வொரு கதைகளைக் கூறும் வண்ணம் படைக்கப்பட்டிருந்தன. எம்மவர்களிடையே வெகுவாக அறியப்பட்ட மதிப்பிற்குரிய கமலா வாசுகி மற்றும் சு. நிர்மலவாசன் ஆகியோர் தலைமையில் பல வகையான வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரையும் இணைத்த வண்ணம் கண்காட்சி இடம்பெற்றது. காண்பியக் கண்காட்சியில் இடம்பெற்ற படைப்புகள் பற்றிய சிறு விளக்கம்:
“வனிதையசோ” என்பவரால் பெண்கள் உணர்வுகளற்ற உறுப்புகளற்றவர்கள் அல்ல, அவர்களும் உணர்வுள்ள உயிர்தான் என்ற தொனிப்பொருளைக் கொண்டு பெண்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் பற்றியும் பேசும் விதமாக ஒரு படைப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
“க. வினோஜன்” அவர்களின் ஓவியப் படைப்பானது அவரின் அனுபவத்தில் எழுந்ததாகக் காணப்பட்டது. ஒரு பெண் தனது குடும்பத்திற்காகச் செய்த தியாகம் மற்றும் வாழ்வாதாரம் பற்றித் தன் மன உணர்வுகளைக் கொண்டு ஓவியத்திற்கு உயிர் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேபோல் “கமலா வாசுகி” அவர்களின் ஓவியங்கள் யதார்த்தத்தைப் பேசும் வண்ணம் படைக்கப்பட்டிருந்தன. இந்த நவீன காலத்தில் பெண்களைப் பற்றி ஆண்கள் விமர்சிக்கும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு வளர்ந்துவிட்டது. கலையோ, வெகுசன ஊடகமோ பெண்களை மதித்து அவர்களின் உணர்வுகளை அறிய வேண்டும் என்பதைப் பேசும் விதமாக அவை உள்ளன.
ஹரினி அமரசூரிய பற்றிய “சுசிமன் நிர்மலவாசன்” அவர்களின் படைப்பு, அன்றைய காலம் தொடக்கம் இன்றைய காலம் வரை ஒரு பெண்ணின் குரல் தனியாக ஒலிக்கப்படுவதில்லை; அவை வளர்ந்து வரும்போதே பலரின் சதித்திட்டம் அக்குரலை அடக்கிவிடுகின்றது என்ற கதையை எமக்கு உணர்த்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“க. ஆதித்தன்” தனது படைப்பில் பெண் தெய்வ வழிபாட்டில் பெண்கள் ஈடுபாடு பற்றி கூறியுள்ளார். ஆரம்பகாலத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பெண்கள் கோயில் வேலை மற்றும் பூசைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் இந்தக் காலம் தீட்டு என்ற போர்வையில் பெண்களை முடக்கிவிடுகின்றது என்ற தனது மனக்கருத்தைக் கூறியுள்ளார்.
பறையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட “ரமேஸ்குமார் யஹாங்கன்” அவர்களுடைய படைப்பு ஒடுக்குமுறை கடந்த பெண் சுதந்திரம் பற்றிப் பேசுகின்றது. பறை என்ற கருவியையும் அதைப் பயன்படுத்துவோரையும் கீழ் மட்டத்தில் வைத்துப் பார்க்கும் மரபைத் தகர்த்து, இன்றைய பெண்கள் தம் நீதிக்கான குரலாக, ஒலியாகப் பறை என்ற வாத்தியத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றி வெளிப்படுத்தி நிற்கின்றது.
‘உணவே மருந்து’ என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு அரியமலர் சசிரேகா அவர்கள் கொலாஜ் முறையில் அருமையாகத் தனது படைப்பில் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்படைப்பின் மூலம் எமது முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானியம் மற்றும் உள்ளூர் உணவுகளை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற செய்தி புதைந்துள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“கோகுலமூர்த்தி கபிலெஜன்” அவர்கள் யதார்த்தமான முறையில் இயற்கை வளங்கள் வெளிநாட்டவர் ஆதிக்கத்தால் சுரண்டப்படும் முறையைத் தனது கடற்கரைக் காட்சி பற்றிய படைப்பில் அழகாகக் காட்டியுள்ளார். பூர்வகுடிகள் பற்றிய ஞாபகமூட்டலையும் அழிந்து வருகின்ற இயற்கை (காடு, நிலம்) பற்றியும், பூர்வகுடிகளின் உணவு முறைகள் மற்றும் தொழில் முறைகள் பற்றியும் பேசும் விதமாக “த. விக்னேஸ்வரன்” அவர்களின் படைப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தனது வாழ்க்கை அனுபவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் “ரிஸ்வானா பாத்திமா சஹானா” அவர்களின் படைப்பு, தங்கள் பிரதேச மீன்பிடி சிறு தொழில் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் இன்றைய அவர்களின் உழைப்பு சுரண்டல் நிலைமை பற்றியும் வெளிப்படுத்தியுள்ளது. “வனோஜன் சிவசோதி” அவர்களின் பாய் பின்னல் தொடர்பான படைப்பானது, அவரின் நேரடி அனுபவத்தின் ஊடாகப் பாய் பின்னல் வேலையில் ஈடுபடும் பெண்களின் கௌரவம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை வெளிக்காட்டும் வண்ணம் காணப்பட்டது.
இக்காண்பியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஒவ்வொரு விடயமும் பார்வையாளர்களுடன் நேரடியாகக் கதை பேசும் வண்ணம் காணப்பட்டன. வன்முறைகளைக் களைந்து வன்முறைகளற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற கோஷத்தைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியமை போற்றத்தக்க விடயமாகும்.
அதே தினத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முகத்துவார வெளிச்சவீட்டுச் சூழலில் “நூறு கோடி மக்களின் எழுச்சி” என்ற மாபெரும் நிகழ்வு பல கலைஞர்கள் மற்றும் கலைகளுடன் இணைந்த வண்ணம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பல வகையான நிகழ்வுகளை உள்ளடக்கிய வண்ணம் காணப்பட்டது.
மலையக மண்ணின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் ஒரு கூடாரம் காணப்பட்டது. அதில் மலையக உறவுகள் தங்கள் வாழ்வாதாரம் பற்றிய கலைகளுடன் தங்கள் செயற்பாட்டை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். சிறுவர்களை மையமாகக் கொண்ட கூடாரத்தில் அவர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தும் வண்ணம் பாடல்களைப் பாடி ஓவியம் வரையச் செய்யும் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
“அன்பினால் ஆன உலகைச் செய்வோம்” என்ற தொனியில் அமைக்கப்பட்ட கூடாரமானது, மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் வன்முறை செய்வதைத் தவிர்ப்போம் என்ற எண்ணத்தை விதைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது. அதேபோல் “அதிகாரக் கூம்பு” என்ற படைப்பை மையமாகக் கொண்ட கூடாரம், முதலாளித்துவ அதிகாரம் மற்றும் தொழிலாளர்களின் நிலைமை பற்றிய விழிப்புணர்வைக் காட்டி நின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் பெண்கள் குழுவினரால் நீதிக்கான பறை அழகாக ஒலிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது சிறுவர்களின் சமத்துவம் பற்றிய பாடல்களும் இடம்பெற்றன. பேராசிரியர் சி. ஜெய்சங்கர் தலைமையில் கூத்து நிகழ்வு ஒன்றும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. அதுமட்டுமன்றி அவர்களின் தலைமையில் பெண் சுதந்திரம் என்ற கருத்தை மையப்படுத்திச் சிறப்பான பாடல் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சூரியா பெண்கள் குழுவினர், யாழ்ப்பாணம் எனப் பல குழு அமைப்புகளால் நாடகங்கள் இடம்பெற்றன. நாடகங்கள் பார்ப்போரை மகிழ்விக்கும் வண்ணமும் சிந்திக்க வைக்கும் வண்ணமும் நிகழ்த்தப்பட்டன. நாடகத்தின் நடிப்பு முறை மற்றும் பாடல் முறைகள் நாடக விறுவிறுப்பைத் தூண்டி மக்களின் பார்வையை ஓரிடத்தில் நிலைநிறுத்தி வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதுமட்டுமன்றி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் எமது உள்ளூர் உணவுகளை நினைவுபடுத்தும் வண்ணம், உள்ளூர் உணவுகளைக் கொண்ட ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. அதில் நுகர்வுக்காக உள்ளூர் உணவுகள் வைக்கப்பட்டன. இதன் மூலம் நம்மில் பலர் தெரியாத, அறியாத உணவு முறைகள் மற்றும் உணவுப் பொருட்கள் பற்றி அறிந்துகொள்ளக் கூடியதாகக் காணப்பட்டது.
நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி முடிவடையும் வரை பெண் சுதந்திரம், நீதி, சமத்துவம் என்பவற்றை வெளிக்காட்டி நின்றன. வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரை மையமாகக் கொண்டு இவை நிகழ்த்தப்பட்டன. நிகழ்வுகள் ஆரம்பம் முதல் முடிவு வரை பல கலைஞர்கள் மற்றும் பல அமைப்புகள், மட்டக்களப்பு முகத்துவார விளையாட்டுக்கழகத்தினர் எனப் பலரின் உழைப்பும் காணப்பட்டது. இந்த நிகழ்வில் இனம், மதம், மொழி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். நிகழ்வுகளின் இறுதியில் மேடையில் ஒன்றுகூடி அனைவரும் நடனமாடியபோது அவர்களின் கவலைகள் மறந்து ஒரு ஒற்றுமையும் சமத்துவமும் வெளிப்பட்டு நின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிப்ரவரி 14ம் திகதி இடம் பெற்ற காண்பியக் கண்காட்சி மற்றும் நூறு கோடி மக்களின் எழுச்சி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பாக நடைபெற்றன.
இரத்தினராஜா சஞ்சிதா