164
ஈரான் உடனான மோதல் முற்றியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கைக்கு உலக நாடுகள் வெவ்வேறு பதில்களை அளித்து வருகின்றன.
பிரித்தானியா (UK) – புதிய தொழில்நுட்பத்துடன் தயார்!
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க பிரித்தானியா தனது கடற்படைக் கப்பல்களையும், கடலில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைக் கண்டறியும் ‘ட்ரோன்’ (Drones) கருவிகளையும் அனுப்பத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என கூறப்ட்டாலும் அதனை அனுப்புவதற்கு விருப்பம் இன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை ஈரான் கடற்பகுதியில் கண்ணிவெடிகளை வைத்திருப்பதாக எழுந்துள்ள அச்சத்தைத் தொடர்ந்து, அவற்றைச் செயலிழக்கச் செய்ய இந்த நவீன கருவிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் (France) – அமெரிக்காவின் கோரிக்கைக்கு மறுப்பு!
அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. தற்சமயம் ஹார்முஸ் பகுதிக்கு மேலதிக போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என அந்த நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரான்ஸின் கடற்படை தற்சமயம் மத்திய தரைக்கடல் பகுதியிலேயே நிலைநிறுத்தப்படும் எனவும், தற்போதைய பதற்றமான சூழலில் மோதலைத் தவிர்க்க விரும்புவதாகவும் பாரிஸ் தெரிவித்துள்ளது.
தென்கொரியா (South Korea) – எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலை!
அமெரிக்காவின் அழைப்பைத் தொடர்ந்து, தென்கொரியா தனது கடற்படைப் பிரிவுகளை ஹார்முஸ் பகுதிக்கு அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகிறது. தென்கொரியாவின் மசகு எண்ணெய் இறக்குமதியில் சுமார் 70% இந்த ஜலசந்தி வழியாகவே வருவதால், தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்த நாடு உள்ளது. இது குறித்து அமெரிக்காவுடன் தென்கொரியா நெருக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
பொருளாதாரத் தாக்கம்: உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்தப் பாதை வழியாகவே நடக்கிறது.
ஈரானின் நிலைப்பாடு: அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்குத் தடை விதித்துள்ள ஈரான், பிற நாடுகளின் கப்பல்களுக்குத் தற்காலிக அனுமதி அளித்து வருகிறது.
Spread the love

