ஈரான் தொடர்பான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க அமெரிக்கா தனது கூட்டமைப்பான நேட்டோ நாடுகளிடம் ஆதரவு கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், எந்த நாட்டும் முழுமையான ஆதரவை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஈராக்கில் அமைந்துள்ள பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக்கில் செயல்பட்டு வந்த நேட்டோ அமைப்பின் ஆலோசனைக்குழு அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இந்த குழுவின் கடைசி துருப்பும் நேற்று வெளியேறியதாக நேட்டோ உயர் தளபதி தெரிவித்துள்ளார். மேலும், அங்கு பணியாற்றிய உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேட்டோ ஆலோசனைக்குழு நேரடி போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு அல்ல. இது ஈராக் அரசாங்கத்துக்கு பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல், இராணுவ திறன்களை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் ஆலோசனைகள் வழங்கும் நோக்கத்துடன் இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த ஆலோசனைக்குழு இனிமேல் இத்தாலியின் நோபிள் நகரில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் இருந்து தனது பணிகளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#NATO_Withdrawal #IraqConflict #IranAttack #StraitOfHormuz #MilitaryAdvisory

