Home இலங்கைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிள்ளையானுக்கு தெரிந்திருந்தது – வவுணதீவு தாக்குதல் புலிகளின் பக்கம் திருப்பப்பட்டது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிள்ளையானுக்கு தெரிந்திருந்தது – வவுணதீவு தாக்குதல் புலிகளின் பக்கம் திருப்பப்பட்டது!

 திட்டமிடப்பட்ட சதி அம்பலம் - நாடாளுமன்றத்தில் அதிரடித் தகவல்கள்

by admin
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனிப்பட்ட தற்செயல் சம்பவம் அல்ல என்றும், அது 2017ஆம் ஆண்டு முதல் மிக நுணுக்கமாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஒரு பாரிய சதித் திட்டம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றின் போது உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சதித்திட்டம் தொடர்பாகப் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தற்போதைய விசாரணைகளின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
குறிப்பாக, சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவருக்கு இந்தத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சஹாரன் ஹாஷிமை பின்னணியிலிருந்து இயக்கிய ஒரு குழு மற்றும் ஒரு நபர் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இச்சதித்திட்டம் மற்றும் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரே இந்த வழக்கின் முதலாவது சாட்சியாகவும் பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னதாக 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி வவுணதீவில் காவற்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டமை, 2017 டிசம்பரில் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை மற்றும் 2019 ஜனவரியில் வனத்தவில்லுவவில் வெடிபொருட்களுடன் சந்தேகநபர்கள் பிடிபட்டமை போன்ற அனைத்தும் ஒரே குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் நிகழ்வுகளாகும். வவுணதீவு காவற்துறை அதிகாரிகளின் கொலையுடன் தொடர்புடைய பிரதான நபரை அன்றே கைது செய்திருந்தால், ஈஸ்டர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அன்றைய நல்லாட்சி அரசாங்கம் இந்த விசாரணைகளை முறையான திசையில் கொண்டு செல்லத் தவறியதுடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீதே இக்குற்றத்தைச் சுமத்தி உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்துள்ளது. 2019 பெப்ரவரி மற்றும் ஏப்ரல் காலப்பகுதிகளில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டமையானது விசாரணைகளைத் திசைதிருப்பும் சதியாகவே பார்க்கப்படுகிறது. தற்போது எமது அரசாங்கத்தின் கீழ் இவ்விடயம் தொடர்பான முழுமையான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More