கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய கடந்த 2016-இல் ஆணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தென்னிந்திய நதி நீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்
மனுவில் சிறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து கடன்களை, அதாவது 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.