Home இலங்கைமன்னார் – பேசாலை பகுதியில் வீதி போக்குவரத்து காவற்துறையினரின் நடத்தை தொடர்பாக கடும் விமர்சனம்!

மன்னார் – பேசாலை பகுதியில் வீதி போக்குவரத்து காவற்துறையினரின் நடத்தை தொடர்பாக கடும் விமர்சனம்!

by admin
மன்னார் – பேசாலை பகுதியில் வீதி போக்குவரத்து காவற்துறையினரின் நடத்தை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி ஒன்று பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பேசாலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இடைமறித்து ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் அநாகரீகமாக நடந்துகொண்டதாக குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பேசாலை காவல் நிலைய பிரதான வீதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது கடமையில் இருந்த இரண்டு காவற்துறை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி, வாகன ஆவணங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டுள்ளனர். குறித்த நபர் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கியிருந்த போதிலும், அவற்றை பரிசோதித்த காவற்துறை அதிகாரி உடனடியாக மீள வழங்காமல், தனது பதிவு புத்தகத்தில் குறிப்பெடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யத் தொடங்கியதாக அந்த நபர் தெரிவிக்கிறார். இதற்கு பதிலளித்ததாகக் கூறப்படும் காவற்துறை அதிகாரி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாகவும், தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பின்னர், ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின் மீண்டும் வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பேசாலை பொலிஸ் நிலைய வீதியில் இரவு நேரங்களில் கடமையில் ஈடுபடும் சில வீதி போக்குவரத்து காவற்துறையினர், பொதுமக்களை இடைமறித்து பணம் அல்லது மதுபானம் கோருவதாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வன்னி பிராந்திய காவற்துறை உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More