Home இலங்கைசெம்மணி மனிதப் புதைகுழி: 246 மனித எச்சங்கள் அடையாளம் – அகழ்வுப் பணிகள் தீவிரம்!

செம்மணி மனிதப் புதைகுழி: 246 மனித எச்சங்கள் அடையாளம் – அகழ்வுப் பணிகள் தீவிரம்!

by admin
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆறாம் நாளான இன்று சனிக்கிழமை (02 மே 2026), முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் போது மேலும் இரண்டு மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையான காலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மொத்த மனித எச்சங்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த எச்சங்களில் மூன்று என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட 246 எச்சங்களில், 243 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய கறுப்பு நிற மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை தற்போது உலர விடப்பட்டுள்ளன. இந்த மண் மாதிரிகள் மேலதிக இரசாயனப் பகுப்பாய்விற்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மேலும், இன்றைய அகழ்வின் போது மரத்திலான பெட்டி போன்ற ஒரு அமைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது அதனைச் சுத்தப்படுத்தும் பணிகள் மிக அவதானமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பெட்டி போன்ற அமைப்பு தொடர்பான மேலதிக விபரங்கள், தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அகழ்வுப் பணிகள் இடம்பெறாது எனவும், ஏழாம் நாள் அகழ்வுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (04 மே 2026) மீண்டும் தொடரும் எனவும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More