குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் மனைவிமாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாய் பேச முடியாத மற்றும் காது கேட்க முடியாத பெண்ணொருவரை கடந்த 2009ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி கடத்தி சென்று பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று புதன் கிழமை அளிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் குற்றவாளிகள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் பின்னர் குற்றவாளிகளின் உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அது தொடர்பில் நீதிபதி தெரிவிக்கையில் ,
குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்கள் எவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுடனோ அல்லது அவர்களது உறவினர்களுடனோ எந்த விதமான தகராறுகள் அச்சறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது.
அவ்வாறு ஈடுபட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்கும் சாட்டத்தின் பிரகாரம் பிணையில் வெளிவரா முடியாத அளவுக்கு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த படுவீர்கள்.
சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு மறுநாள் இராணுவ புலனாய்வாளர்கள் குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்த போது முதலாவது குற்றவாளியின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்று தாக்குதல் நடாத்தி உள்ளார். அதனை நீதிமன்றிலும் ஒப்புக் கொண்டு உள்ளார்.
இனி அவ்வாறு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட கூடாது என எச்சரித்தார்.