இந்திய அரசாங்கம் மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் மிகுந்த கரிசனை காட்டி வருகிறது எனவும் எனவே இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்நாட்டுப் பிரதிநிதிகள் நாளை இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை உட்பட அமைச்சு மட்ட பேச்சுவார்த்தைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் விரைவில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மீன்பிடித்துறைக்கு நவீன வசதி கொண்ட படகுச் சேவையினை அறிமுகப்படுத்தும் ‘சீ நோர்’ நிறுவனத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழிநுட்ப வசதிகளை உலகில் மீன்பிடியில் முன்னணியில் உள்ள நோர்வே வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டை ஆண்மிக்கும்போது மீன் பிடித்துறையை அபிவிருத்திசெய்து, நாட்டில் அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டும் முதல் மூன்று துறைகளில் மீன்பிடித்துறையையும் கட்டியெழுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாhகவும் அவர் குறிப்பிட்டார்.