150
நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளைய தினம் வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது வழக்கு தொடுனர் சார்பில் அழைக்கபப்ட்ட சாட்சியங்களின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டதையடுத்து,
எதிரி தனது வாக்குமூலத்தை சாட்சி கூட்டில் நின்று அளித்தார். அதனை தொடர்ந்து அரச சட்டத்தரணி நா.நிஷாந்த் தொகுப்புரையில் குறிப்பிடுகையில் எதிரிக்கு கொலை குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து எதிரி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி பா. ரஞ்சித்குமார் எதிரி இக் குற்றத்தை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என தனது தொகுப்புரையில் குறிபிட்டார். அதனை தொடர்ந்து குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை வெள்ளிகிழமை வழங்கப்படும் என மேல் நீதிபதி தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி.
கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் நெடுந்தீவுகாவல்துறையினரால் சந்தேகத்தில் கைது செய்யபப்ட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
Spread the love