232
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் 2016 இற்கான கலாசார விழா மிகவும் சிறப்பாக மலையாளபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.நேற்றைய தினம் (07-04-2016) மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிராம மக்கள் கலைஞர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
வருடந்தோறும் கலாசார விழாக்கள் நகரை அண்டிய பகுதிகளில் மண்டபங்களில் இடம்பெற்ற வந்த வழமை மாற்றப்பட்டு கிராமங்களை நோக்கி பிரதேச மட்ட கலாசார விழாக்களை நகர்த்தியது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் 2016 இற்கான கரைச்சியின் கலாசார விழாவை மலையாளபுரம் கிராமத்தில் நடத்த தீர்மானித்தமையினால் குறித்த விழாவை தங்களுடைய விழாவாக கிராம மக்கள் கருதி அதில் பங்குதாரர்களாக மாறி மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். விழா நடந்த வீதியில் பொது மக்கள் வாழை தோரணங்கள் கட்டி கும்பம் வைத்து பண்பாட்டு விழிமியங்களை பிரதிபலிக்கின்ற வகையில் விழா ஏற்பாடுகளை வழமைக்கு மாறாக மேற்கொண்டிருந்தனர்.
இம் முறை கலாசார விழாவில் கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்ட நான்கு வகையான முப்பத்தியாறு படங்கள் மூன்று ஒலிநாடாக்கள் ஏழு புகைப்பட அல்பங்கள் ஒரு ஆய்வு நூல் இத்தனையும் ஒரு பிரமாண்ட மேடையில் ஒன்றாக கிளிநொச்சி கலாசார விழாவில் வெளியிட்டமை சிறப்பம்சமாகும்.
அத்தோடு சமூப்பணி, கலைப் பணி, வேளாண்மை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரதேச மட்டத்தில் அரும்பணியாற்றிவர்கள் எட்டுபேர் கலாசார பேரவையினால் தெரிவு செய்யப்பட்டு கரை எழில் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார விழா பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் பிரதம விருந்தினர் மாலை ஜந்து மணிக்கே வருகை தந்ததன் காரணமாக விழாவில் கலந்துகொள்ள வருகைதந்த அனைவரும் வீதியில் காத்திருந்த நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் பிரதம விருந்தினர் தனது உரையின் போது தாமதமாக வருகை தந்தமைக்காக சிறு வருத்தம் கூட தெரிவிக்காமையும் சபையின் கவனத்தை ஈர்த்திருந்தது.
கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டார். அத்தோடு கிளிநொச்சி பதில் வலயக் கல்விப்பணிப்பாளர் கிருஸ்ணகுமார் பிரதேச செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Spread the love