வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா:-
அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான எனது அனுபவம், ஆற்றல் காரணமாகவே, நான் ஈ.பி.டி.பி கட்சியைச் சார்ந்தவராக இருந்தும், முதலமைச்சர் தன் சார்பாக அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படி கோரியிருந்தார்.
அவ்வாறான அவரினது கோரிக்கைகளிற்கு நான் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேனேயன்றி, அவர் சார்பாக கழியாட்ட விழாக்களிலோ, அல்லது பொது நிகழ்வுகளிலோ நான் பங்கு கொள்ளவில்லை. முதலமைச்சர் சார்பாக நான் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தொடர்பான பல ஊகங்களும், தரக் குறைவான விமர்சனங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.
கடந்த சனி, ஞாயிறு தினங்களில் மாற்றுக் கொள்கைகளிற்கான அமையத்தினால் நீர்கொழும்பு ஹெறிற்றன்ஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘புதிய அதிகாரப் பகிர்வு ஊடான தீர்வு’ (New Devolution Settlement for Sri Lanka) கருத்தரங்கில் தன் சார்பாக ஏனையோருடன் என்னையும் பிரதிநிதித்துவப்படுத்துமாறு கோரியிருந்தார்.
இம் மகாநாட்டில் மாகாண முதலமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாகாண சபைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான உள்நாட்டு, வெளிநாட்டு வளவாளர்கள் பங்கேற்றிருந்தனர். நான் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் அவர் சார்பிலும் பங்கெடுத்திருந்தேன்.
இதற்கு முன்பும் ஜுலை 8 ம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் தலைமையிலான வழிநடத்தற் குழு (Steering Committee) முன்பாகவும் முதலமைச்சர் சார்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சருடன் சேர்ந்து பங்கேற்றிருந்தேன்.
சந்திரிக்கா அம்மையாரினால் ஆகஸ்ட் 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான வரைபு, பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சகல கட்சிகளின் மாநாடு (APRC) மற்றும் அண்மையில் அமைக்கப்பட்ட ‘அரசியலமைப்பு மாற்றத்திற்கான பொது மக்கள் கருத்தறி குழு’ ஆகியவற்றில் நான் பங்கெடுத்து ஆக்கபூர்வமாக செயற்பட்டதன் விளைவாக முதலமைச்சர் மட்டுமல்ல ,அரசியலமைப்பு பேரவையினால் உருவாக்கப்பட்டிருக்கும் உபகுழுக்களில் ஒன்றான மத்தி-மாகாணங்களிற்கிடையிலான உறவுகளிற்கான (Centre – Periphery Relations) குழுவிலும் நான் ஓர் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
சி. தவராசா
எதிர்க்கட்சித் தலைவர்
வடக்கு மாகாணசபை