கிளிநொச்சி புதுமுறிப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார். கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இலக்கம் ஏழு அக்கராயன்குளம் பகுதியைச்சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் வயது 67 என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். இறந்தவரின் உடலின் பகுதிகள் சம்பவ இடத்தில் காணப்படுகிறது.
குறித்த பேரூந்துக்கு போதியளவு பிறேக் இன்மையே விபத்துக்கு காரணம் எனவும் நேற்று சனிக்கிழமை கூட பிறேக் சரியான முறையில் வேலை செய்யாமையினால் மரம் ஒன்றுடன் மோதியதாகவும், ஒரு வருடத்திற்கு முன்னரும் ஸ்கந்தபுரம் பகுதியில் இதே பேரூந்து ஒருவரை மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றைய தினமும் ஒருவர் பலியானதை தொடர்ந்து ஒன்று திரண்ட பிரதேச இளைஞர்கள் , சாலை முகாமையாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடிதம் மூலம் குறித்த பேரூந்தை இனி சேவையில் ஈடுபடுத்தமாட்டோம் என உறுதிமொழி வழங்கினால் மாத்திரமே பேரூந்தை சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிப்போம் எனத் தெரிவித்து எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.20 மணிக்கு வருகைதந்த காவல்துறையினர் இளைஞர்களுடன் சமரச முயற்சியில் ஈடுப்ட்ட போதும் அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நான்கு மணியளவில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி உதவி காவல்துறை அத்தியட்சர் றொசான் ராஜபக்ஸ வருகை தந்து எதிர்ப்பில் ஈடுப்ட்ட இளைஞர்களுடன் சமரச முயற்சியில் ஈடுப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதன் போது காவல்துறையினர் எதிர்ப்பில் ஈடுப்பட்ட இளைஞர்களை தொலைபேசியில் வீடியோ எடுத்ததோடு, உதவி காவல்துறை அத்தியட்சரால் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் எதிர்ப்பில் ஈடுப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தெரிவித்தும் இளைஞர்களின் எதிர்ப்பை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். இதற்கிடையில் கலகம் அடக்கும் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்