பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பும், அமெரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளன. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சுமார் 130 இலங்கைப் படையினருக்கு எதிராக பாலியல் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் படையினருக்கு அரசாங்கம் தண்டனை விதிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ஸ்ாீபனே டூஜாரிக் (Stéphane Dujarric) உ தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் அனைத்து நாடுகளும் தமது படையினரின் ஒழுக்கத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைதி காக்கும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.