யாழ் போதனா வைத்தியசாலையானது வடமாகாணத்தில் உள்ள தனித்துவமான ஒரு போதனா வைத்தியசாலையாகும். 1240 படுக்கைகளைக் கொண்ட இவ் வைத்தியசாலையில் 79 வைத்திய நிபுணர்கள் அடங்கலாக 1500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் பணிபுரிகின்றார்கள். இலங்கையில் காணப்படுகின்ற ஏனைய போதனா வைத்தியசாலைகளோடு ஒப்பிடுகையில் தாதியர் பற்றாக்குறையானது இங்கு மிக முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
தாதிய பாடசாலைக்கு ஆட்சேர்ப்பு
ஒவ்வொரு வருடமும் தை மற்றும் ஆனி மாதங்களில் இலங்கையில் உள்ள 18 தாதியர் பயிற்சிப் பாடசாலைகளிலும் தாதிய பயிற்சிநெறிகள் ஆரம்பமாகும். இதற்காக அதற்கு முன்னைய வருடத்தில் ஆட்சேர்ப்புக்காக அரசாங்க வர்த்தமானி மூலம் விண்ணப்பம் கோரப்படும். அவ்வாறு விண்ணப்பம் கோரப்படும் ஆண்டில் அதற்கு முன்னைய 3 ஆண்டுகளில் (உயிரியல், பௌதீக விஞ்ஞான) கணித, விஞ்ஞானப் பிரிவில் உயர்தரக் கல்வியினை, பூர்த்தி செய்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படும். உதாரணமாக இவ்வருடம் நேர்முகத்தேர்வுக்கு 2015, 2014 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த)பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் தகுதியானவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பின்வரும் நிபந்தனைகளின் கீழ் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.
- க.பொ.த (உ/த)பரீட்சையில் உயிரியல், பௌதீக விஞ்ஞான பாடத்தில் 03 பாடங்களில் சித்தியுடன் க.பொ.த(சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய 04 பாடங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.
- வயதெல்லை 18 வயதிலிருந்து 28 வயது வரை,
- உயரம்:- 4’10” ஆகும்
- அத்துடன் திருமணகாத ஒருவராகவும் இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சிக்காக 95 சதவீதம் பெண்களும் 5 சதவீதம் ஆண்களும் தெரிவு செய்யப்படுவர். இத்தாதிய மாணவர்களுக்கு 03 வருட பயிற்சிக் காலத்தில் மாதாந்த பயிற்சிப்படியாக ரூபா 30,000 வழங்கப்படும்.
மேலே உள்ள நிபந்தனைகள் தேசியரீதியில் தாதிய பாடசாலைகளுக்கு, தாதியர்களைச் சேர்த்துக் கொள்ளும்போது பின்பற்றப்படும் நடைமுறையாகும்.
யாழ் போதனா வைத்தியசாலையில் தாதிய ஆளணி
யாழ் போதனா வைத்தியசாலையில் 1983 முதல் 405 ஆக இருந்த தாதிய ஆளணியின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையானது பல வருடங்களாக அதிகரிப்புச் செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில் வைத்தியசாலையில் புதிய பல சிகிச்சைப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு பிற்பகுதியில் தாதிய ஆளணியினரின் எண்ணிக்கை தற்காலிகமாக 607 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆயினும், போதனா வைத்தியசாலையில் தற்போது 432 தாதியர்களே கடமையாற்றுகின்றனர். இருப்பினும் இவ்வருடம் வைத்தியசாலையில் முழுமையான தாதிய ஆளணி அதிகரிப்பு செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஆண்டு | படுக்கைளின் எண்ணிக்கை
(BED Strength) |
விடுதியில் அனுமதிக்கப்பட நோயாளர் எண்ணிக்கை | கிளினிக்கில் சிகிச்சை பெற்ற நோயாளர் எண்ணிக்கை | தாதியரின் எண்ணிக்கை |
1996 | 490 | 17,153 | NA | 405 |
1997 | 720 | 40,015 | NA | 405 |
1998 | 756 | 51,348 | NA | 405 |
1999 | 839 | 59,718 | NA | 405 |
2000 | 842 | 56,068 | 375,084 | 405 |
2001 | 930 | 56,052 | 409,636 | 405 |
2002 | 920 | 75,002 | 433,810 | 405 |
2003 | 920 | 87,132 | 458,309 | 405 |
2004 | 920 | 97,204 | 491,875 | 405 |
2005 | 995 | 96,415 | 478,346 | 405 |
2006 | 1200 | 80,840 | 451,370 | 405 |
2007 | 1200 | 77,449 | 434,462 | 405 |
2008 | 1200 | 82,195 | 448,175 | 405 |
2009 | 1228 | 93,546 | 456,934 | 405 |
2010 | 1228 | 111,079 | 476,616 | 405 |
2011 | 1303 | 115,842 | 531,330 | 405 |
2012 | 1303 | 123,604 | 637,361 | 407 |
2013 | 1280 | 124,894 | 659,516 | 407 |
2014 | 1268 | 131,785 | 570,563 | 407 |
2015 | 1220 | 135,914 | 645,219 | 407 |
2016 | 1240 | 129,830 | 651,607 | 432 |
யாழ் போதனா வைத்தியசாலையானது 2000 ஆம் ஆண்டில் 840 படுக்கைகளைக் கொண்டிருந்தது. இந்த எண்ணிக்கை 2016 இல் 1240 ஆக அதிகரிக்கப்பட்டது. அதே வேளை 2000 ஆம் ஆண்டில் 56,068 பொதுமக்கள் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கையானது 2016 இல் 129,830 ஆக இருமடங்கை விடவும் அதிகரித்துக் காணப்பட்டது. இருப்பினும், 2000 ஆம் ஆண்டில் 405 ஆக காணப்பட்ட தாதிய ஆளணி 2016 இல் படுக்கை வசதிகள் மற்றும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டபோதும் ஏற்ற விகிததித்தல் அதிகரிக்கப்படவில்லை. 2000 இல் 56,068 நோயாளிகளுக்கு 405 தாதியர்கள் கடமையில் இருந்த அதேவேளை 2016 இல் 129,830 நோயாளிகளுக்கு 432 தாதியர்களே கடமையாற்ற வேண்டிய நிலையில் இருந்தனர்.
இலங்கையின் ஏனைய போதனா வைத்தியசாலைகளோடு ஒப்பிடுகையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதிய ஆளணியானது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
நாட்டில் உள்ள சில போதனா
வைத்தியசாலைகள் |
படுக்கைளின் எண்ணிக்கை (BED Strength) | கடமையாற்றும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை | தாதிய ஆளணியின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை | கடமையாற்றும் தாதியரின் எண்ணிக்கை | |
1 | Teaching Hospital, Kandy | 2366 | 83 | 2100 | 1900 |
2 | Teaching Hospital, Kurunagala | 1844 | 38 | 1250 | 1200 |
3 | Teaching Hospital, Anuradhapura | 1364 | 35 | 1290 | 875 |
4 | Teaching Hospital, Jaffna | 1240 | 79 | 607 | 432 |
5 | Colombo South Teaching Hospital | 1098 | 1100 | 805 | |
6 | Teaching Hospital, Peradeniya | 1000 | 668 | 635 | |
7 | Teaching Hospital Batticaloa | 998 |
52 |
625 | 454 |
நாட்டில் உள்ள பிரதான போதனா வைத்தியசாலைகளில் உள்ள படுக்கை மற்றும் வைத்திய நிபுணர்களோடு ஒப்பிடுகையில் தாதிய ஆளணி யாழ் போதனா வைத்தியசாலையில் குறைவாக உள்ளமையை அட்டவணையில் காணலாம் |
1844 படுக்கைகளைக் கொண்ட குருநாகல் போதனா வைத்தியசாலையில் 1200 தாதியர்கள் சேவையில் ஈடுபடுகின்றனர். அதேவேளை 1364 படுக்கைகளைக் கொண்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 875 தாதியர்கள் சேவையில் உள்ளனர். ஆனால், 1240 படுக்கைகளைக் கொண்ட யாழ் போதனா வைத்தியசாலையில் 432 தாதியர்களே கடமையாற்றுகின்றனர். நாட்டிலுள்ள ஏனைய போதனா வைத்தியசாலைகளோடு ஒப்பிடுகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் 850 இற்கும் அதிமான தாதிய ஆளணி இருக்க வேண்டும். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட 607 ஆளணியினரில் தற்போது 432 தாதியர்களே கடமையாற்றுகின்றனர். இது வைத்திய சேவையை வழங்குவதில் பெரும் சவாலை ஏற்படுத்துகின்றது.
வடபகுதியில் தாதியர் பற்றாக்குறைக்கான காரணம்
- வடபகுதியில் க.பொ.த (உ/த) இல் உயிரியல், பௌதீக விஞ்ஞானத்திற்கு தோற்றும் மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகின்றமை.
- வட மாகாணத்தில் உள்ள கிராமப்புற மற்றும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் க.பொ.த (உ/த) இல் கணித விஞ்ஞான பிரிவுகள் இல்லாதிருத்தல்.
- தாதியர்களது கடமை தொடர்பான அச்ச உணர்வு. ஏனைய தொழில்களைப் போலல்லாது அர்ப்பண உணர்வும் சேவை மனப்பான்மையும் மிகவும் வேண்டப்படுகின்றமை.
- பல்வேறு துறைகளுக்காக மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்படும்போது கடைப்பிடிக்கப்படும் மாவட்ட கோட்டா தாதிய பாடசாலைகளுக்கு தாதியர்கள் தெரிவுசெய்யப்படும் போது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
- வட பகுதி மாணவர்களின் கல்வித் தரத்தில் வீழ்ச்சி காணப்படுவதால் உச்சப்புள்ளி(மெரிட்) அடிப்படையில் தாதிய பாடசாலைகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படும்போது அதிகளாவான தென்பகுதி மாணவர்கள் தாதிய பாடசாலைகளுக்கு தெரிவு செய்யபடுகின்ற நிலை காணப்படுகின்றது.
- யாழ் போதனா வைத்தியசாலைக்கு தென்பகுதியில் இருந்து தாதிய கடமைக்கு வருபவர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இப்பகுதியை விட்டு முற்றாக வெளியேறுகின்றமை.
- புதிதாக தாதியர்கள் சேவைக்கு உள்ளீர்க்கப்படும் போது பிரதேச ரீதியில் தெரிவு செய்யப்படாமை
தாதிய பாடசாலை ஆண்டு / வகுப்பு ரீதியான மாணவர் | அனுமதிக்கப்பட்டோர் | கல்வியைப் பூர்த்தி செய்தோர் | விலகியோர் | |
1 | 2006 A | 40 | 35 | 05 |
2 | 2006 (II) | 39 | 36 | 03 |
3 | 2007 A | 196 | 165 | 31 |
4 | 2009 A | 18 | 17 | 01 |
5 | 2011 A | 117 | 94 | 45 |
6 | 2011 B | 149 | 118 | 18 |
7 | 2012 A | 30 | 24 | 03 |
8 | 2014 | 26 | – | 04 |
9 | 2015 A | 84
தமிழ் மாணவர்கள் – 35 (Females 35) சிங்கள மாணவர்கள் – 48 (Males-15, Females – 33) |
– | 01 |
10 | 2015 B | 10 | – | – |
யாழ் தாதிய பாடசாலையில் கற்று வெளியேறிய மாணவர் விவரமும்
தற்போது கற்கும் மாணவர் விவரமும் |
யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
- தாதியர்களுக்கான போதியளவு விடுதி வசதி இல்லாதிருத்தல். தற்போது போதனா வைத்தியசாலையில் 60 இற்கும் மேற்பட்ட தாதியர்கள் தங்கக் கூடிய கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகிறது.
- தாதியர்கள் ஒப்பீட்டளவில் இருவேளை கடமை(Double Duty) செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றமை.
- ஒருவர் கடமைக்கு வராத பட்சத்தில் தொடர்ச்சியாக 24 மணிநேரத்திலும் அதிகமாக கடமை செய்ய நிர்ப்பந்திக்கிப்படுகின்றமை.
- அவசர விடுப்பு (லீவு) எடுக்க முடியாதிருக்கின்றமை.
- பிள்ளைகள் குடும்பத்தினரரை பராமரிக்க முடியாதிருத்தல்.
தாதியர் பற்றாக்குறையால் வைத்தியசாலை எதிர்நோக்கும் சவால்
- தாதியர் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை சத்திர சிகிச்சைக் கூடத்தில் 50 சதவீத சத்திரசிகிச்சைக் கூடமே பயன்படுத்தப்படுகின்றது. போதியளவு சத்திரசிகிச்சை நிபுணர்கள் இருக்கின்றார்கள், மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றன, ஆய்வு கூட வசதி இருக்கின்றது இருப்பினும் தாதியர் பற்றாக்குறை நிலவுவதால் சத்திர சிகிச்சைக் கூடத்தினை முழுமையாகப் பயன்படுத்த முடியாதுள்ளது.
- அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 22 படுக்கைகளில் (ICU BEDS) 13 கட்டில்கள் மட்டுமே தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
- பல சத்திரகிச்சைகள், மருத்துவப் பரிசோதனைகள் பிற்போடப்படுகின்ற நிலைமை
- மருத்துவ விடுதிகளில் அதிகரித்துவரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி பராமரிக்க முடியாமை.
- புதிதாக சிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பிக்க முடியாதிருத்தல்
தாதியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு என்ன செய்யலாம்?
- வடபகுதி மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு பிரதேச, மாவட்ட கோட்டா அடிப்படையில் தாதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளல்
- க.பொ.த (உ/த) இல் கணித, விஞ்ஞான பிரிவு தவிர்ந்த வர்த்தக மற்றும் கலைப் பிரிவு மாணவர்களை தாதிய பயிற்சியில் சேர்ப்பதற்கு உரிய அழுத்தங்களை மக்கள் பிரதிநிதிகள் கொடுத்தல் வேண்டும்.
- தாதிய நியமனம் வழங்கப்படுகின்ற போது யாழ் போதனா வைத்தியசாலை வெற்றிடத்தை நிரப்புவதற்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தல்.
- க.பொ.த (உ/த) கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கு அதிகளவான மாணவர்களை உள்வாங்கத்தக்க வகையில் மாணவர்களை க.பொ.த (சா/த) கற்கின்ற போதே ஊக்குவித்தல். தாதிய சேவைக்கு 95 சதவீதம் பெண்கள் தெரிவுசெய்யப்படுவதால் அதிகளவு மாணவிகளை கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்க ஊக்குவித்தல்.
இதேவேளை தாதிய சேவை மட்டுமன்றி ஏனைய துணை மருத்துவ சேவைகளான எக்ஸ் கதிரியக்க தொழிநுட்பவியலாளர், மருந்தாளர், ஆய்வு கூட தொழிநுட்ப உத்தியோகத்தர், முதலான துணை மருத்துவ சேவைகளுக்கும் கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களே தெரிவு செய்யப்படுவதால் க.பொ.த(உ/த) இல் கணித விஞ்ஞான பிரிவுகளில் அதிகளாவன மாணவர்களை உள்வாங்கத்தக்க வகையில் திட்டமிட்ட கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
வடமாகாண மாணவர்களின் கடந்த 5 வருட புள்ளிவிவரங்கைள எடுத்து நோக்குகையில் க.பொ.த(உ/த) இல் உயிரியல் மற்றும் பௌதீக விஞ்ஞானப் பிரிவுக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதை அவதானிக்கலாம். அதேவேளை கடந்த 2012 முதல் 2016 வரை க.பொ.த(சா/த) பெறுபேறுகளின் அடிப்படையில் வடபகுதி கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. இது வடபகுதியின் அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புக்களிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். வடமாகாண மாணவர்களின் கல்வித்தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்துதரப்பினரும் குறிப்பாக கல்விப்புலத்தைச் சேர்ந்தவர்கள் கூடிய அக்கறை காண்பிக்க வேண்டும். இதுவே தாதிய சேவை மட்டுமன்றி ஏனைய துறைகளுக்கும் வடபகுதி மாணவர்களை அதிகளவு உள்ளீர்க்க வாய்ப்பாக அமையும்.
வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி,
பணிப்பாளர்,
போதனா வைத்தியவாலை,
யாழ்ப்பாணம்.