யுத்தம் முடிவடைந்தவுடன் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் யுத்தத்தில் வெற்றிபெற்ற முன்னைய அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளிலும் பார்க்க, யுத்த வெற்றியைக் கொண்டாடுவதிலும், வெற்றிக் களிப்பை அனுபவிப்பதிலும், அந்த வெற்றியை உள்ளுரில் பொதுமக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் தனது அரசியல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்துவதிலேயே குறியாக இருந்தது.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினரை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கான வசதிகள் வாய்ப்புக்களை அதிகரிப்பதிலும், அவர்களை சிவில் நிர்வாகச் செயற்பாடுகளில் முதன்மைப்படுத்துவதிலுமே மிகுந்த அக்கறையோடு செயற்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி அவர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த மனக்கசப்பை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிக்க வில்லை.
அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஊட்டுவதற்கும் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் அவர்களின் மறுவாழ்வுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குவதிலும் அரசாங்கம் உளப்பூர்வமாகச் செயற்படவில்லை.
தனது யுத்த வெற்றியை நிலைநாட்டுவதற்கான போர் வெற்றிச் சின்னங்களை உருவாக்குவதிலும், இராணுவத்தின் வீரதீரப் பிரதாபங்களை தென்னிலங்கை மக்கள் மத்தியில் பரப்புவதிலேயே அந்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியிருந்தது. யுத்த காலத்தில் தென்னிலங்கையில் இருந்த சிங்கள மக்கள் செல்ல முடியாதிருந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் மூலை முடுக்குகளுக்கு அவர்கள் உல்லாசப் பயணங்களை மேற்கொள்வதற்கும், அத்தகைய பயணங்களின்போது, இராணுவத்தினரை வீரம் மிகுந்த கதாநாயகர்களாகச் சித்தரித்துக் காட்டுவதற்கான நடவடிக்கைகளிலேயே அதிக நாட்டம் கொண்டிருந்தது.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் இழப்புக்கள், துன்பங்கள், அழிவுகளுக்கும் ஆளாகியிருந்தார்கள் என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் சக பிரஜைகளாகிய சிங்கள மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து அந்த அரசாங்கம் செயற்பட்டிருந்தது.
யுத்தத்தில் வெற்றி பெற்றதையடுத்து, இடம்பெயர்ந்திருந்த மக்களை மீள்குடியேற்றுவதாகவும், அவர்களுக்கான மறு வாழ்வு நடவடிக்கைகளைப் பெரிய அளவில் முன்னெடுப்பதாகவும் முன்னைய அரசாங்கம் போலியானதொரு தோற்றத்தை சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் காட்டுவதில் மிகத் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட்டிருந்தது. இந்தப் போலித் தோற்றத்தைக் காட்டுவதன் ஊடாக, யுத்தப் பேரழிவுகளினால் சிதைந்து போன வடக்கையும் கிழக்கையும் மீளக்கட்டியெழுப்புவதான ஒரு போக்கைக் காட்டி, அதற்கென பெருமளவிலான நிதியை, கொடையாகவும் கடனாகவும் பெற்றுக்கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டி, அதில் முன்னைய அரசாங்கம் வெற்றியும் கண்டிருந்தது என்றே கூற வேண்டும்.
ஆயினும் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து. நாட்டில் இயல்பான ஒரு சூழலை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் போக்கு காட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் யுத்தத்திற்குப் பின்னர் ஆறு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது,
இராணுவ மயமாக்கலில் தீவிர கவனம் செலுத்தி, எதேச்சதிகார போக்கில் நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் பயணம் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் தடைபட்டுப் போனது. அந்த ஆண்டு தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மகிந்த ரரிஜபக்சவின் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியிருந்தார்கள்.
மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகியிருந்த புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கமாக மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.
அதற்கேற்ற வகையில் யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வில் விமோசனத்தை ஏற்படுத்தப் போவதாகவும் புதிய அரசாங்கம் போக்கு காட்டியிருந்தது.
ஆனால் காலம் செல்லச் செல்ல, புதிய அரசாங்கமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பதை என்பதைப் பாதிக்கப்பட்ட மக்கள் கண்டுகொண்டார்கள். ஆனால், தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையோ, புதிய அரசாங்கமே எல்லாவற்றையும் அளிள்த்தர வல்லது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகின்றது, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதன் ஊடாக அரசியல் தீர்வை 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்போகின்றது என்று தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரசாரம் செய்து அவர்களின் நமபிக்கையை வென்றெடுப்பதற்கும், தமிழ் தரப்பின் அரசியல் நடவடிக்கைகள் எதுவும், தென்பகுதியில் உள்ள பௌத்த சிங்களத் தீவிர அரசியல் சக்திகளை நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக உசுப்பிவிட்டு,, புதிய ஆட்சிக்கு நெருக்கடிகள் ஏதும் உருவாகிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தது.
ஆட்சி மாறியபின்பும், இராணுவத்தின் பிடியில் உள்ள எதிர்பார்த்த அளவு வேகமாக காணிகள் விடுவிக்கப்படவில்லை, அதனால், இராணுவத்திடம் காணிகளைப் பறிகொடுத்துவிட்டு, அகதி முகாம்களிலும், உறவினர் நண்பர்களது வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் அவலப்பட்டிருக்கின்ற இடம்யெர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் தடைபட்டிருந்ததையும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுலை குறித்து கண்துடைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. என்பதையும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய முறையில் பொறுப்பு கூறாமல் அரசு காலம் கடத்துகின்றது என்பதையும் பாதிக்கப்பட்ட மக்கள் தெளிவாக உணரத் தலைப்பட்டார்கள்.
இத்தகைய உணர்வின் மூலம் அரசியல் ரீதியான ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றத்தக்க வiயிலான அரசியல் நடவடிக்கைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமயினால் முன்னெடுக்கப்படவில்லை. இதுவும் அவர்களுடைய ஏமாற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றது.
இந்தப் பின்னணியில்தான் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை மேலும் பாதிக்கச் செய்யும் வகையில் அரச தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி அவர் வெளியிட்டிருந்த செய்தியில் இராணுவத்தினர் யுத்தத்தில் பெற்ற வெற்றியைப் போற்றித் தக்க வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தாரே தவிர, யுத்தத்தின் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் இன்னும் தவித்:துக் கொண்டிருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதை அவர் குறி;ப்பிடவில்லை.
‘பிற்போக்கு சிந்தனைகளிலிருந்தும், பழைமவாதப் போக்கிலிருந்தும் விடுபட்டு, புதிய மனிதான உருவாக வேண்டும் என்பதே சித்திரைப் ,புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படும் அனதை;து சம்பரதாயங்களினதும் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். அவ்வாறு புதிய சிந்தனையுடன் புதுப்பிக்கப்படுவதனாலேயே புத்தாண்டு எமது வாழ்வின் புதியதொரு ஆரம்பமாகக் கருதப்படுகின்றது.
ஆகையினால், வென்றெடுத்த வெற்றியை மேலும் நிலைபெறச் செய்வதுடன், நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை பேணும் நாடாக, பலமாக எழுச்சி பெறுவோம் என மலர்ந்துள்ள இந்த புத்தாண்டில் உறுதி கொள்வோம்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புத்தாண்டில் பேண விரும்புகின்ற நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை நாட்டில் உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவில்லை என்பதை, வடக்கிலும் கிழக்கிலும், தமது காணிகளுக்காகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்துள்ள போரட்டங்களும், தமது வாழ்வாதாரத்திற்குரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று வடக்கிலும் கிழக்கிலும் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ள போராட்டங்களும் அமைந்திருக்கின்றன.
புத்தாண்டு செய்தியில் மட்டுமல்ல. பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதும், அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை ஆறுதலடையச் செய்யத் தக்க வகையிலான கருத்துக்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியையும் சமாதானத்தையும் பலமாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் அதிகமாகவே இருக்கின்றது. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படவோ அல்லது தீவிரவாதத்தின் அடிப்படையிலான ஒரு போராட்டம் நிகழவோ கூடாது என்பதில் அரசாங்கமும், அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவருமே உறுதியான கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகத்துறையினருக்குக் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றியோ நிலைமாறுகாலத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் பற்றியோ ஆணித்தரமான கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
காணிகளுக்காகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நடைபெறுகின்ற போராட்டங்கள் மற்றும், வேலைவாய்ப்பு கோரி நடத்தப்படுகின்ற பட்டதாரிகளின் போராட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கின்ற போதிலும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் அவரிடமிருந்து வெளிப்படவில்லை.
நல்லிணக்கமும், நிலைமாறு கால நீதிக்கான செயற்பாடும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொருத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றது. நல்லிணக்கம் என்பது வெறும் பேச்சளவில் நிறைவேற்றப்படக் கூடிய விடயமல்ல. உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட அது நம்பிக்கையின் அடிப்படையில் கட்;டியெழுப்பப்பட வேண்டியதாகும்.
உணர்வுகள் மதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மனங்கள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். இது வெறுமனே அரசியல் ரீதியான வாக்குறுதிகளினாலும், அரசியல் ரீதியான இலாபங்களைக் கவனத்திற்கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற கண்துடைப்பு அரசியல் நடவடிக்கைகளினாலும் சாதிக்கப்பட முடியாததொரு விடயமாகும்.
உணர்வுகள் மதிக்கப்பட்டு நல்லுறவு மேம்படும்போதுதான் நம்பிக்கையும் உருவாகும். அதன் ஊடாகவே நல்லிணக்கம் சாத்தியமாகும். நல்லிணக்கத்தின் அடிப்படையிலேயே நிலை மாறு கால நீதிச் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட முடியும். நிலைமாறுகால நீதி;க்கான செயற்பாடென்பது, உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், நிவாரணம் வழங்குதல், பாதிப்புகள் மீள் நிகழாமையை உறுதி செய்தல் ஆகிய நான்கு தூண்களின் மேல் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒரு கைங்கரியமாகும்.
உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்குதல் என்பது யுத்தத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது என்ற அரசியல் சாயம் பூசப்பட்ட கருத்துருவாக்கம் தென்னிலங்கையில் பரவலாகவும், ஆழமாகவும் பரப்பப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாகவே நல்லாட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள விவசாயத்தைப் பின்புலமாகக் கொண்ட நல்லதொரு ஜனநாயகவாதி என கருதப்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இராணுவத்தினரை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன் என்று சூளுரைக்கச் செய்திருக்கின்றது.
அவருடைய இந்தக் கூற்றும், அரசியல் நிலைப்பாடும் சிங்கள பௌத்த மக்களின் மனங்களை ஆறுதல்படுத்தக் கூடியதாக இருக்கலாம். அதேவேளை, இராணுவத்தினரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை அந்தக் கூற்றும் நிலைப்பாடும் மிகமோசமாக கீறி காயப்படுத்தியிருக்கின்றன என்பதை அவரும் அவர் சார்ந்தோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பாவிகள் மீது இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டவர்களையும் காரணமே இல்லாமல் ஆட்களைப் பிடித்துச் சென்று காணாமல் ஆக்கியவர்களையும் எந்த மனித மனமும், சரியான காரியமாக அல்லது சரியான கடமைசார்ந்த பணியாக ஏற்றுக்கொள்ளமாட்டாது.
இராணுவம் ஆயுதம் ஏந்தியவர்களுடன் போர் புரிந்ததும் அதில் வெற்றி கண்டதும் வேறு விடயம். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களையும், கடத்திச் செல்லப்பட்டவர்களையும், கண்காணாத முறையில் பிடித்துச் செல்லப்பட்டவர்களையும் வலிந்து காணாமல் ஆக்கியவர்களை கடமையின் நிமித்தம் பணி செய்தார்கள் என்று ஏற்று அவர்களை எவரும் மன்னிக்கப் போவதில்லை.
எனவே, யுத்த காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் அரச படையினருக்கும், அதிரடிப்படையினர் மற்றும் பொலிசாருக்கும் அரசாங்கம் வழங்கியிருந்த அதீத அதிகாரங்களையும் அதிகார வலுவையும் பயன்படுத்தி நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் முதலில் இனம் காணப்பட வேண்டியது அவசியம். அத்துடன் அதீத அதிகாரங்களையும் சக்தியையும் அளவுக்கு மிஞ்சிய வகையில் – தேவையற்ற முறையில் பயன்படுத்தியவர்கள் அந்தச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டியதும் அவசியம். இவைகள் நிறைவேற்றப்படாத வரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. அந்த நீதியின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாணம் கிடைக்கப் போவதுமில்லை. அதிகார துஸ்பிரயோகங்களும், அளவுக்கு மிஞ்சிய வகையில் அதிகார பலத்தைப் பயன்படுத்திய குற்றச் செயல்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மீண்டும் நிகழாமையை உறுதி செய்யவும் முடியாமற் போகும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால், ஊடகத்துறையினர் மத்தியில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் முதலில் சிறிய அளவில் நீடிக்கப்பட்டதையும் பின்னர், 2017 ஆம் ஆண்டு அந்தக் கால அவகாசம் மேலும் இரண்டு வருடங்களுக்கு – 2019 ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டிருப்பதையும் ஆழ்ந்த திருப்தியுடன் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை, உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழிந்த பின்பே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஐநா மனித உரிமைப் பேரவையில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்திற்குள் பொறுப்பு கூறுகின்ற நடவடிக்கைள் முன்னெடுத்து முடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பாதிப்புகளுக்கான நீதியைப் பெறுவதற்காக இன்னும் இரண்டு வருடங்கள் செல்லப் போகின்றதே என்ற கவலையில் அவர்கள் ஆழ்ந்துள்ள நிலையிலேயே, இன்னும் இரண்டு வருடங்களின் பின்பே பொறுப்பு கூற வேண்டியிருக்கி;ன்றது என்ற ஜனாதிபதியின் கருத்து வெளியாகியிருக்கின்றது. இது பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களை மேலும் பாதிப்படையச் செய்திருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் மீதும், அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமயின் மீதும் மேலும் அவநம்பிக்கையை அதிகரிப்பதற்கான நிலைமையையே உருவாக்கியிருக்கின்றது.
ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உரித்தானவர். அவர் ஓர் இனத்திற்கு மட்டுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றவர்களுக்கோ உரித்தானவரல்ல. அத்துடன் இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களுக்கு மாத்திரம் அவர் அரச தலைவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு தொகுதியாக மாற்றப்பட்டு, அதனடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்றது. அத்தகைய தொகுதி அடிப்படையிலேயே நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்து, பெரும்பான்மை பலத்தைப் பெறுபவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுகின்றார். எனவே ஜனாதிபதி என்பவர் நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றார். அதேபோன்று ஒவ்வொரு வாக்காளருக்கும் தனது நடவடிக்கையின் மூலம் பொறுப்பு கூற வேண்டியவராகவும் இருக்கின்றார்.
ஆனால் ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பார், பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் தமது பிர்ச்சினைகளை ஜனநாயக முறைப்படியும், மனிதாபிமானத்துடனும் தீர்த்து வைப்பார் என்ற அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து அதிக அளவில் அக்கறை காட்டாத ஒருவராகவே பாதிக்கப்பட்ட தமிழ்; மக்களினால் நாட்டின் தலைவர் கருதப்படுகின்றார்.
இந்த நிலைமை நாட்டின் ஐக்கியத்திற்கும், யுத்தம் முடிவடைந்துள்ளதையடுத்து ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் என்பவற்றிற்கும் முரணானது. அது ஆரோக்கியமானதல்ல என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.