திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராமம் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் செல்வாக்குப்’ பெற்ற இடம். இங்கு காலம் காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதுடன் வரலாற்றுச் சிறப்புக்களையும் கொண்டுள்ளது.
திரியாய் கிராமத்தை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல கிராமங்கள் சிங்கள மயமாக்கப்பட்ட நிலையில் திரியாய் கிராமத்தையும் முற்றாக சிங்கள மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவு – புல்மோட்டை – திருகோணமலை வீதியில் திரியாய் கிராமம் அமைந்திருக்கிறது. தமிழ் மன்னர்களின் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மிகுந்த திரியாயில் சோழர்கால சிவாலயமும் காணப்படுகின்றது.
தற்போது அங்கு புத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டு திரியாய் என்ற தமிழ் கிராமத்தை கிரி விகாரை என்ற அடையாளத்தால் அழைக்கப்படுகிறது. அத்துடன் பாடப்புத்தங்களிலும் திரியாய் பண்டை தலம் என்ற தோரணையில் இணைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் திரியாய் கிராமத்தில் முழுக்க முழுக்க தமிழ் மக்களே வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை விட்டு மக்களை துரத்த பல்வேறு சூழ்ச்சி நடவடிக்கைகள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கிராமத்தின் அடிப்படை தேவைகளின் ஒன்றான வைத்தியசாலையை மூடும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
பாம்புக்கடி, யானைத் தாக்குதல் என பல்வேறு அசௌகரியங்களின் மத்தியிலேயே இந்தக் கிராத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்த மக்களுக்கு குறித்த வைத்தியசாலை மிகவும் அவசியமானதாகும்.
குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அங்கு பணிபுரிந்த தாதியர் ஒருவரும் மூதூர் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இனப்படுகொலை கலவரங்களால் திரியாய் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இக் கிராமத்தின் அடிப்படை தேவைகளை துண்டிப்பதன் ஊடாக கிராமத்தை விட்டு மக்களை நகரத்திற்கு நகர்த்தி குறித்த பகுதியை சிங்கள மயமாக்குவதே நோக்கம் என்று பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.