கடந்த மூன்று தசாப்பதங்களாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வந்த இனவழிப்பு யுத்த காலத்திலும், 2009 யுத்த முடிவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் போகச் செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் யுத்தம் முடிந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கூட எதுவும் தெரியாத நிலையே நீடிக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அரசு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கு எங்கும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இப்போராட்டங்களை பலப்படுத்தும் வகையில் எமது முழுமையான ஆதரவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆரம்பத்திலிருந்தே வழங்கி வருகின்றோம்.
எனினும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் பொறுப்புக் கூறல் தொடர்பில் இரண்டு வருட கால அவகாசத்தை தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைமைகளின் ஆதரவுடன் பெற்றுக் கொண்ட சிறீலங்கா அரசு அதே தரப்புக்களின் ஒத்துழைப்புடன் உறவினர்களைத் தேடும் மக்கள் போராட்டங்களை பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு பலவீனப்படுத்தி கைவிடச் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டுவருகின்றது.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து 27-04-2017 அன்று வடக்கு கிழக்கு முழுதிலும் பூரணமான இயல்பு நிலை மறுப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இவ் இவ் இயல்புநிலை மறுப்புப்(ஹர்த்தால்) போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரணமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், சகல பொது அமைப்புக்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வர்த்தக நிலையங்களை மூடியும், பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்
தலைவர்