ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டில் சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்ட போது தாம், கட்சியின் தலைமைப் பதவியை பறிக்க முயற்சிக்கவில்லை எனவும் கட்சியின் ஐக்கியத்தை நிலைநாட்டும் நோக்கில் தாம் இவ்வாறு செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் நான்கு தசாப்தங்கள் கட்சியின் உறுப்பினராகவும் 13 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேனவினால் கட்சிக்கு எவ்வித பாதகமும் ஏற்படாது என தாம் கருதியதாகவும்; தெரிவித்துள்ளார்.
கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தாம் 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டதாகவும் கட்சித் தலைமை தொடர்பில் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்ட நிலையிலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டதாகத் தெரிவித்துள்ள அவர் 43 உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் பதவியை வழங்கியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் தலைவராக தெரிவானதன் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான கொள்கைகளையே ஜனாதிபதி பின்பற்றியிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ கடந்த இரண்டாண்டுகளில் காலத்திற்கு காலம் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் கட்சியின் தற்போதைய பிளவு நிலைக்கு முழுப் பொறுப்பினையும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.