யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வு தொடர்பில் உரிய பொறிமுறை ஒன்றை வகுத்து, பயனாளிகள் நியாய விலையிலும், இலகுவாகவும், தரமானதாகவும் அதனைப் பெறக்கூடிய ஒரு நிலைப்பாட்டினை புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் நேரடிக் கண்காணிப்பாளர்களின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (03) நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள துஃ425 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடாரப்பு வடக்கு கிராமத்தை மையமாகக் கொண்டு, அம் மக்களது பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வு நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதிகளும், அப்பகுதி மக்களும் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கனரக இயந்திரங்களைப் பாவித்தும், சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் மரங்களை அழித்தும், மணல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மணல் அகழ்வுப் பிரதேசங்களை துப்புரவு செய்து மரங்களை எரித்து தடயங்களை அழித்து புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியத்திற்கு தெரியாமலும், சுற்றுச் சூழல் மத்திய நிலையத்தின் ஆரம்ப சூழல் பரிசோதனை மதிப்பீட்டு அறிக்கை மற்றும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை போன்ற அனுமதிகள் எதுவுமே பெறப்படாமலும், மாதத்திற்கு சுமார் 2500 கியூப்புகளுக்கும் அதிகளவிலான மணல் சட்டவிரோதமான முறையில் அகழப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறதென தெரிவித்துள்ள அவர் யாழ் குடாநாட்டில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.