மாகாண சபையில் முறைகேடாக நடந்து கொண்ட அரச அதிகாரிகள் பலர் பூலில் போடப்பட்டுள்ளனர். இவர்களை பூலில் போடாமல் பூசாவில் போட்டால் மட்டுமே அலுவலகங்களில் இடம்பெறும் பல பிரச்சினைகளை இல்லாமல் செய்யலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் வேலைகளைச் செய்யாமல் தமது தேவைகளை மட்டும் முறைகேடாக நிறைவேற்றி வரும் இவர்களால் எப்படி யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் முன்னேறும் என்பது கேள்விக்குறியே. இவர்களை காப்பாற்றுவதற்காக சில தமிழ் அரசியல்வாதிகளும் முயற்சி செய்வது தான் கேவலமான செயற்பாடாகும்.
பிரதேச செயலர்களாக பதவி கிடைத்ததும் கண் மண் தெரியாமல் பல செயலர்கள் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமல்ல அந்தப் பிரதேசமும் என்பது தெரியாமல் இருக்கிறார்களா? அல்லது தெரிந்தும் தமக்கு கிடைத்த இந்த செயலர் வாய்ப்பை பயன்படுத்தி தமது அடுத்த சந்ததியும் வாழக்கூடியவாறு பணத்தை முறைகேடாக சேகரிக்கிறார்களா? விசாரணை இவர்கள் மீது வந்துள்ளது. ஏதோ ஒன்று நடந்தபடியால் தானே விசாரணைப் பிரிவு இவர்கள் மீது பாய்ந்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம் இன்னும் அபிவிருத்தியின்றி இருக்கின்றது. அதனால் பல வழிகளில் நிதி அபிவிருத்திக்கு வருகிறது. அந்த நிதியில் கைவைக்கும் இவர்களை என்னவென்று சொல்ல முடியும். இந்த மண்ணில் தானே பிறந்து வளர்ந்தவர்கள் இவர்கள் மட்டும் ஏன் இப்படி நடக்கின்றார்கள். பொறுப்பில்லாமல் இருக்கும் இவர்களுக்கு பதவிகளை வழங்கி இருக்கும் மிச்சத்தையும் இல்லாமல் செய்யப் பார்க்கின்றார்களா?
காதல் பாடல் பாடும் மோகன் போல் அல்லாமல் விஜி படத்து காட்சி போல் இருந்தாலும் கூண்டில் இதுவரை ஏறாமல் இருக்கும் பணியாளர்களுடன் முறைகேடாக செயற்படும் ஒரு பிரதேச செயலரை அடிக்கடி இடமாற்றியும் அவர் அடங்கிற பாடில்லை. அதனால் தமிழர் ஆட்சியமைக்க உருவாக்கப்பட்ட சபையில் பூலில் இவரை போட்டிருக்கிறார்கள்.
பெண் பணியாளர்கள் சிலர் இவரால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, ஒருசிலர் ஆனந்தம் அடைகின்றனர். இவர் இடமாற்றப்பட்டு வேறு அலுவலகத்துக்கு போகும் போது விம்மி விம்மி அழுகின்றனர். மக்களின் சேவையை சரியாக வழங்குகின்றவர்கள் இடமாற்றப்பட்டு போகும் போது அவர்களின் சேவையை பாராட்டி விருந்தோம்பலை செய்யாமல் வழியனுப்பும் அலுவலகங்கள் மக்களின் தேவையை அல்ல தம்முடைய தேவையை அளவுக்கு அதிகமாக முறைகேடாக நிறைவேற்றும் செயலர்களுக்கு பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தி விலை உயர்ந்த பரிசுப் பொருள் வழங்குவதில் முன்னிற்கின்றது. இந்த சீர்கெட்ட கலாச்சாரம் இப்பொழுது அரச அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த செயலரின் ஓட்டுமாட்டு வேலை காரணமாக வலி.மேற்கில் உள்ள அலுவலகத்தில் இருந்து வலிகாமம் கிழக்குப் பகுதியொன்றில் இருக்கும் பிரதேச அலுவலகத்துக்கு இடமாற்றப்பட்டார். சோடியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல் அங்கேயும் ஆள் சும்மா இருக்கவில்லை. வாகன சாரதியிடம் அடி வாங்கிய முதல் செயலர் என்றால் இவர் தான். ஊழியர் ஒருவருடன் பிரச்சினைபட்டதும் மீண்டும் இவரை முல்லைத்தீவில் உள்ள அரச அலுவலகத்துக்கு இடமாற்றினார்கள். அங்கேயும் ஆள் சும்மா இருக்கவில்லை. பொறுத்தது போதும் என்று வடமாகாண சபைக்குள் பூலில் போட்டிருக்கிறார்கள்.
வடமாகாண விவசாய அமைச்சின் செயலராக இவர் வரவிருந்த போது இவரின் சீர்கேட்டை அறிந்த விவசாய அமைச்சர் மறுத்துவிட்டார். இவரை எந்த அலுவலகத்தில் போட்டாலும் பெண் பிரச்சினை வரும் என்ற காரணத்தால் தயங்குகின்றது அரச நிர்வாகம். இவரின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தண்டணை வழங்காது விடின் இவரைப் பார்த்து புதிதாக வரும் அதிகாரிகளும் அண்ணன் வழி தம்பி போல் செயற்பட தொடங்கிவிடுவார்கள் பிறகென்ன வடமாகாண அலுவலகங்கள் கிளுகிளுப்பாக இயங்கும்.