இருபத்தி ஐந்து வருடங்களாக தமது சொந்த நிலத்;திலிருந்து இடம்பெயர்ந்து இன்னும் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரணைதீவு மக்களின் அவலத்தையும், கோரிக்கையையும் இந்த அரசாங்கம் அக்கறையோடு செவி சாய்த்துக் கேட்டு அதற்கு பரிகாரம் காண வேண்டும் எனவும் அந்த மக்கள் தமது பூர்வீக நிலமான இரணைதீவில் மீளக்குடியமர்வதைத் தடுக்கும் எந்தக் காரணங்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தம்மை மீண்டும் தமது சொந்த நிலத்தில் வாழ அனுமதிக்க வேண்டுமெனக் கோரி நடத்திவரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எழுதியுள்ள கடிதத்திலேயே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஈபிடிபி கட்சியின் ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டு நாட்டின் போர்ச் சூழல் காரணமாக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், தேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்துடனும் இரணைதீவில் வாழ்ந்த 185 குடும்பங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து பெரு நிலப்பரப்பான இரணைமாதா நகரில், உறவினர், நன்பர்கள் வீடுகளிலும், சிலர் தமக்கு கிடைக்கப்பெற்ற வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
நிலையற்ற அந்த வாழ்க்கையில் இந்த மக்கள் அனுபவித்துவரும் அவலங்களிலிருந்து விடுபட்டு, தாம் பூர்வீகமாக வாழ்ந்த சொந்த நிலத்திற்குத் திருப்புவதற்கு பல முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். நானும் அந்த மக்களைச் சென்று பார்வையிட்டதுடன், இரணைதீவுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளையும் நேரடியாக ஆராய்ந்து வந்தேன்.
அந்த மக்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும், அவர்கள் தமது சொந்த இடம் திரும்புவதன் அவசியம் தொடர்பாகவும் ஏற்கனவே நான் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் இருக்கின்றேன்.
கடந்த 25 ஆண்டுகளில் 185 ஆக இருந்த இரணைதீவு மக்களின் குடும்ப எண்ணிக்கை தற்போது 340 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 60ஆக இருக்கின்றது. அந்தக் குடும்பங்களின் துயர் துடைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களை சொந்த நிலத்தில் சுய பொருளாதாரத்தில் வாழ விடுவதே ஒரே வழியாகும்.
இந்த நிலையில் இந்தக் குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினை விஷ்வரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலும் கடற்தொழிலையும், கால் நடை வளர்ப்பையும் நம்பியே இவர்கள் வாழ்பவர்கள் என்பதால் அவர்கள் சொந்த நிலத்தில் வாழும்போதே தமக்குரிய தொழிலைச் செய்யமுடியும்.
இடம்பெயர்ந்து வாழும் இடத்தில் அவர்கள் தமது தொழிலைச் செய்யமுடியாது. இந்த நெருக்கடி நிலையிலிருந்து அவர்கள் மீள்வதற்கும், சுய பொருளாதாரத்தில் தமது வாழ்வை மேம்படுத்திக்கொள்வதற்கும் இரணைதீவுக்கு மீண்டும் மீள்குடியேறிச் செல்வதே ஒரே தீர்வாகும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே இரணைதீவு மக்கள் இப்போது அறவழிப்போரட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்கள் தம்மை சொந்த மண்ணில் மீள் குடியேற்றும்வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
யுத்தம் நடந்தபோது பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் இடம் பெயர்வது தவிர்க்க முடியாததாக இருந்ததை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அழிவு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இன்னமும் எமது மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாமலிருப்பதையும், மீளக்குடியேற முடியாமலிருப்பதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இரணைதீவு மக்களைப் பற்றிக் கூறும்போது, இதுபோல் கேப்பாபிலவிலும், பிலக்குடியிருப்பில் விடுவிக்கப்படாத பகுதியிலும், வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் வாழ்ந்த மக்களின் கோரிக்கைகளும், போராட்டங்களும் உணர்த்துகின்ற செய்தியும் இதுவாகத்தான் இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே சொந்த நிலங்களில் மீள்குடியேறவும்;, சுய பொருளாதாரத்தில் வாழவும் ஏங்குகின்ற தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவான தீர்வை வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது