நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு மாகாண சபை செயற்பாடுகள் முறைப்படியாக இருக்க வேண்டியதுடன், அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் சீர் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (06) முற்பகல் ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்ற 33 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒன்பது மாகாண சபைகளும் ஒன்பது விதமாக செயற்படுவதனால் நாட்டின் பொது அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பெரும் சிக்கல் நிலவுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பொதுவான உடன்பாட்டுடன் இந்த நிறுவனங்களை இயக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்.
வினைத்திறனான மக்கள் சேவையை வழங்க முடியாருப்பதனால் மக்கள் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாவதனால் மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்புகளை நிறைவேற்றுவது அனைவரினதும் கடப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அதிகாரம் எப்படியிருந்தாலும், அவற்றை அமுல்படுத்துவோரின் நடத்தைப் பாங்குக்கமையவே செயற்திறன் இருக்குமென தெரிவித்த ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்பதனை தெளிவுபடுத்தக்கூடிய அண்மைக்கால உதாரணமாக மீத்தொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்தைக் குறிப்பிடலாமெனவும் தெரிவித்தார்.
34 ஆவது மாநாடு நடைபெறவுள்ள வடமேல் மாகாணத்துக்கு முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட்டது. தற்போது தலைமை வகிக்கும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன ஜனாதிபதி முன்னிலையில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க அவர்களிடம் தலைமைத்துவத்தை ஒப்படைத்தார்.
முதலமைச்சர்கள், விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, வடமத்திய மாகாண ஆளுனர் பீ.பி.திசாநாயக்கா, பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.