Home இலங்கை 24 வருட சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி தண்டனை குறைப்பு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு

24 வருட சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி தண்டனை குறைப்பு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு

by admin
இராணுவத்தின் சுற்றவளைப்பு தேடுதல் ஒன்றின்போது 19 வயதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 24 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதியொருவர், தனது சிறைத் தண்டனையைக் குறைத்து சாதாரண பிரஜையாக வாழ வழிசெய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதியே இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கருயை மனுவின் முழு விபரம் வருமாறு:
செல்லப்பிள்ளை மகேந்திரன்
சிறை இல. வை.13139
புதிய மகசின் சிறைச்சாலை
கொழும்பு 7
சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள்
ஊடாக
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு 01
கனமுடையீர்
ஆயட்கால சிறைத் தண்டனையை சாதாரண சிறைத் தண்டனையாகக் குறைத்தல் தொடர்பானது
எமது தாய் நாட்டின் தலைமகனாகிய ஜனாதிபதி அவர்களே
தேவாலய வீதி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு எனும் நிரந்தர முகவரியைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் ஆகிய நான், 1993 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு, அறியாததொரு குற்றத்திற்காக, கடந்த 24 வருடங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் தயவுகூர்ந்து, எனது இந்த கருணை வேண்டுகோளினை பரிசீலித்து, நானும் ஒரு சாதாரண பிரஜையாக இந்நாட்டில் வாழ சந்தர்ப்பமளிக்குமாறு தயவுடன் வேண்டுகிறேன்.
அதாவது நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் போர் சூழ்ந்த மட்டக்களப்பு மண்ணிலேதான். அறியாத, தெரியாத எனது 16 வயதில் அன்றிருந்த ஆயுதக் குழுவாகிய எல்ரீரீயினரின் அறைகூவலுக்கு ஆட்பட்டு, சுமார் இரண்டு வருடங்கள் அவர்களுடைய பாசறைக்குள் இருக்க வேண்டியேற்பட்டது. ஆனல் சிறுவனான என்னை எந்தவொரு படையணி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தவில்லை. குறித்த அமைப்பின் அன்றைய கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்டிருந்த வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களது பணிப்பின் பேரில், முகாமுக்குள் சிறு எடுபிடி வேலைகளைச் செய்து வந்தேன். எனினும், தொடர்ந்து அங்கிருக்க விரும்பாத நான் அவ்வமைப்பில் இருந்து முற்று முழுதாக விலகி எனது 18 ஆவது வயதில், வீட்டிற்கு வந்து கூலித்தொழில் புரிந்து அம்மாவிற்கு உதவியாக இருந்தேன்.
இவ்வாறிருக்கையில், 1993.09.27 அன்று, வந்தாறுமூலை மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட, சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்தின் பேரில் என்னைக் கைது செய்து கொண்டு சென்றனர். அதன்போது எனது வயது 19. விசாரணை என்ற பெயரில் என்னை அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர், தமக்குத் தேவையான வகையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி, எனது கையொப்பத்தையும் பெற்றுக்கொண்டனர். அதற்கமைய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, 1994 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றினால் (HC/6895/94) எனக்கு ஆயுட்காலச் சிறைத் தண்டனையும், அதற்கு மேலதிகமாக 50 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்தத் தண்டனைத் தீர்ப்பு எனது ஏழை பெற்றோரைப் பிரட்டி போட்டு, பிணிதொற்றச் செய்துவிட்டது. கருணை கொண்ட சட்ட உதவி அமைப்பொன்று எனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மேன் முறையீடு செய்து, (ஊயுஃ190ஃ95) வழக்கினை நடத்தியது. கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றமானது, கீழ் நீதிமன்றம் (High Court) வழங்கிய அதே தீர்ப்பினை சரியானதே என்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து குறித்த சட்ட உதவி அமைப்பானது, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் (SC(spl) LA No.165/2003) மனு தாக்கல் செய்தது. அதனைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், எனக்கு ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஆயட்காலச் சிறைத் தண்டனை சரியானதே என்றும், மேலதிகமாக வழங்கப்பட்டிருந்த 50 வருட சிறைத் தண்டனையினை, 10 வருட காலத்துக்குள் அனுபவித்து முடிக்குமாறும் இறுதித் தீர்ப்பளித்தது.
இநத அளவில் துன்பங்களால் துவண்டு, நோய்வாய்ப்பட்டிருந்த எனது தந்தை, கடந்த 2008 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.
அதனையடுத்து எனது தாயாரும் நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். ஆதரவற்ற, நீண்டகால சிறையிருப்பினால் நான், காச நோய், நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற பொல்லாத நோய்களினால் பீடிக்கப்பட்டு, கடந்த 24 வருடங்களாக சிறையில் அல்லல்பட்டு வருகிறேன். என்மீது காணப்பட்டுள்ள குற்றங்களை, எனது 16 வயதிற்கும் 18 வயதுக்கும் இடையில் எவ்வாறு புரிய முடியும், என்ற வினாவுக்கு விடையின்றியே, எனது வாழும் காலம் சிறைக்குள் தொலைகிறது.
எனவே, கருணை உள்ளம் கொண்ட ஜனாதிபதியாகிய தாங்கள், எனது 43 வயதில் 24 ஆவது சிறை வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பதை கருத்தில் எடுத்து, நி;றைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகிய தங்களுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கமைவாக எனது ஆயுட்காலச் சிறைத் தண்டனையினை, சாதாரண சிறைத் தண்டனையாகக் குறைத்துத் தருமாறு வினயமுடன் விண்ணப்பிக்கிறேன். எனது வாழ்க்கையின் சத்தான இளமைக்காலம் கழிந்துவிட்ட நிலையில், எனது மிகுதி வாழ்வுக்கேனும் ஒளியேற்றி உதவும்படி அருள்கூர்ந்து வேண்டுகிறேன்.
நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள
செ.மகேந்திரன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More