கிளிநொச்சி அக்கராயன் ஆற்றுப்பகுதியில் நடைபெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வின் தொடர்ச்சியாக ஸ்கந்தபுரம் சிறுபோக நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள வயல் நிலம் ஊடாக மணல் அகழ்வு நடைபெறுவதாக இப்பகுதி கமக்கார அமைப்புகள் தெரிவிக்கின்றன.
நீர்ப்பாசன வாய்க்கால்கள், மணல் தேங்கி உள்ள வயல் நிலங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடைபெற்று ஸ்கந்தபுரத்தின் சிறுபோக நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள 388, 410, 411 இலக்கக் காணிகள் ஊடாக மணல் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அக்கராயன் ஆற்றுப் பகுதியில் அணைக்கட்டில் இருந்து ஐந்து கிலோ மீற்றருக்கு அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் வரையான பகுதிகளில் மணல் அகழ்வு மேற்கொள்ளக் கூடாது என கரைச்சி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அக்கராயன் பகுதியில் உள்ள பொது அமைப்பு நேரடியாகச் சென்று மனுக் கையளித்தும் அக்கராயனில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதல்களில் ஈடுபட்டனர். மோதல்களில் ஈடுபட்டவர்களை அக்கராயன் பொலிசார் ஒற்றுமைப்படுத்தி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அக்கராயன் பொலிசாருக்கும் மணல் ஈடுபடுபவர்களுக்கும் இடையிலான தொடர்புகளாகும்.
அக்கராயனில் சகல பகுதிகளிலும் மணல் அகழ்வு நடைபெறுகின்ற போது பொலிசார் என்ன செய்கின்றனர். ஒன்றுமே செய்வதில்லை. பொலிசாரின் ஒத்துழைப்புடனேயே மணல் அகழ்வு நடைபெறுவதன் காரணமாக அக்கராயன் பொலிசாரை நீண்ட காலத்திற்கு பணியில் அமர்த்தாமல் அடிக்கடி இடம் மாற்றுவதன் மூலம் பொலிசாருக்கும் மணல் ஈடுபடுபவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் இல்லாமற் போகும். இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் பகுதிகளில் மணல் அகழ்வு நடைபெற்று முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் அக்கராயன் திருமுறிகண்டி வழியாக பிற இடங்களுக்கும் டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படுகின்றது. அனுமதியற்ற முறையிலேயே சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடைபெறுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கு இப்பகுதி பொது அமைப்புகள் மனுக்கள் கையளித்துள்ளன. ஆனால் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுகின்றது. தொடரும் மணல் அகழ்வினால் அக்கராயன் குளத்தின் அணைக்கட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் குளத்தின் கீழான விவசாய முயற்சிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
திறந்து கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து உள்ளன. வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருகின்றன. நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நீர்ப்பாசன முயற்சிகள் மேற்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் அக்கராயனுக்கு வருகை தந்து நிலைமைகளைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேச பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.