தாதியர்களது மகத்துவத்தைப் போற்றி மதிப்பளிக்கும் ஒரு தினமாக வைகாசி 12ம் நாள் சர்வதேச தாதியர் தினமாக 1974ம் ஆண்டிலிலிருந்து வருடாவருடம் உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
கிரீமிய யுத்தத்தின் போது மிகச் சிறந்த முறையில் நோயாளர் பராமரிப்பினை ஒழுங்கமைத்திருந்த-விளக்கேந்திய பெருமாட்டிஎனஅனைவராலும்அறியப்பட்ட-நவீன தாதியத்தின் தாயாரான புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாரது பிறந்ததினமே இவ்வாறு சர்வதேச தாதியர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில்,போர்க்கால நோயாளர் பராமரிப்பில் தாயை மிஞ்சிய தனயர்களான கிளிநொச்சி மாவட்ட தாதியர்கள் நேற்றைய தினம் (12.05.2017) சர்வதேச தாதிய தினத்தினை மாவட்டப் பொதுவைத்தியசாலை கிளிநொச்சியில் சிறப்பாகக் அனுசரித்தனர்.
கடந்த போர்க்கால சூழ்நிலையில்,02.02.2009 அன்று உடையார்கட்டு பாடசாலையில் இடம்பெயர்ந்து இயங்கிய கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் கடமையின் போது உயிர்நீத்த தாதிய உத்தியோகத்தர் செல்வி கஜேந்தினி உட்பட தமது இன்னுயிர்களை மக்களுக்காக அர்ப்பணித்த அனைத்து சுகாதாரத்துறைப் பணியாளர்களையும் நெஞ்சில் இருத்தியவாறு நடந்த இந்த நிகழ்வில், தாதியர் கடமைச் சபதம் எடுத்தல்,சிறப்புரைகள்,மற்றும் தாதியர் தினச் சிறப்பு நிகழ்வுகள் ஆகியன இடம்பெற்றன.
கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலையின் தலைமைத் தாதிய பரிபாலகி திருமதி இரவீந்திரன் அவர்களது தலைமைத்துவத் தின் கீழ், மூத்ததாதிய உத்தியோகத்தர்களது ஒருங்கிணைந்த வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மைதிலி உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு தாதியத்துக்கான தமது கௌரவத்தினைச் செலுத்தினர்.