கடந்த யுத்த காலத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியும் தமக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாததன் காரணமாக தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக தொடர் ஈடுபட்டுள்ளவர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் வட மாகாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 820 தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனத்தை பெற்றுத்தர உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அத்துடன் கடந்த யுத்த காலத்தில் பல வருடங்களாக பணியாற்றிய தமக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் பின்னர் பலருக்கு அரசியல் ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் சுற்றறிக்கையின் அடிப்படையில் தாம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வடக்கில் இறுதியாக இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் தாம் கலந்துகொண்டு பணியாற்றியதாகவும் குறித்த வேலைத்திட்டம் முடிந்த பின்னர் தாம் கை விடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முன்னர் சுகாதார அமைச்சராகவே இருந்திருக்கின்றார் என்பதனால் இந்த விடயம் தொடர்பில் அவரிடம் நேரடியாகவே கலந்துரையாடி அவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.