நாட்டின் தற்போதைய பொருளாதார பின்னடைவு நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எந்த வகையிலும் பொறுப்பு கிடையாது என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அண்மைய 2016ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியோ அல்லது கடந்த அரசாங்கமோ தற்போதைய பொருளாதார பின்னடைவு நிலைக்கு பொறுப்பு சொல்ல முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இரண்டரை ஆண்டுகள் கடக்க உள்ள நிலையிலும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்த அரசாங்கம் முறையே 2.7, 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2014ம் ஆண்டில் மட்டும் மசகு எண்ணெய் கொள்வனவிற்காக 4.5 பில்லயின் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இந்த நாட்டை விற்றுப் பிழைப்பு நடத்தவில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் உரிய நிர்வாகத் திறமைகளை கொண்டு செயற்படவில்லை எனவும் இதனால் பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.