இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றவர்கள் சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக நிதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட ஒன்பது அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இராஜாங்க அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்களின் படி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீரவும் வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பெற்றோலிய வளத்துறை அமைச்சராக அர்ஜூன ரணதுங்கவும் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்கவும் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்கவும் காணி மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சராக கயந்த கருணாதிலக்கவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
மேலும் தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக சந்திம வீரக்கொடியும் அபிவிருத்தி செயற்றிட்ட அமைச்சராக திலக் மாரப்பணவும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மஹிந்த அமரவீரவும் ( ஏற்கனவே உள்ள மீன்பிடித்துறை அமைச்சு உட்பட) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்னர் இருவரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சு வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கு பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.