வளிமண்டலவியல் திணைக்களத்தை மூடிவிட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். நம்பகமான முறையில் எதிர்வு கூறல்களை வழங்க முடியாவிட்டால் வளிமண்டலவியல் திணைக்களத்தை மூடிடுவதே பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமரும், சுற்றுலாத்துறை அமைச்சரும் வளிமண்டலவியல் திணைக்களம் உரிய தகவல்களை வழங்கவில்லை என கூறுவதாக நீங்கள் கூறினால், அதனை மூடி விட வேண்டியதுதான் என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உரிய வளங்களைக் கொண்டு வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்களை வழங்கியதாகவும் கன மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களமும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனமும் எதிர்வு கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த விடயங்கள் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அனர்த்த நிலைமைகளின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.