கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு கீழான தீர்மானிக்கப்பட்ட அளவை விட மேலதிகமாக சட்டவிரோதமாக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் இன்று 01-06-2017 அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன.
இரணைமடுகுளத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டுக்கு 890 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இரணைமடு குளத்திள் கீழ் உள்ள 22 கமக்கார அமைப்புகளுக்கும் வயல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக 280 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இரணைமடுகுளத்தில் பத்து அடிக்கு குறைவான நீர் இருப்பதன் காரணமாக தீர்மானிக்கப்பட்ட பரப்பளவு விதைப்பை தவிர மேலதிக விதைப்பை தொடரவிட்டால் அனுமதிக்கப்பட்ட பயிர்களுக்கும் தொடர்ச்சியாக நீர் வழங்க முடியாத நிலையில் குறித்த பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் எடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவும் இன்றைய தினம் சட்டவிரோத பயிர்ச்செய்கையான 280 ஏக்கரில் உரிமைகோரப்படாத 47 ஏக்கர் முதற்கட்டமாக அழிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்கள் அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பொலீஸார் ஆகியோர் இரணைமடுகுளத்தின் கீழாக 22 கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சட்டவிரோ பயிர்ச்செய்கை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கிளிநொச்சி பிராந்திய நீர்ப்;பாசனத் திணைக்கள பிரதி பணிப்பாளர் என்.சுதகாரன், கிளிநொச்சி கமநல சேவைகள் உதவி ஆணையாளர் வே.ஆயகுலன், பெரும்பாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் காணப்பட்டனர்