காரைநகரைச் சேர்ந்த 77 வயதுடைய மாமியாரை தடியால் தாக்கி கைமோசக் கொலை செய்த மருமகனுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 13 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இந்தச் சம்பவம் நடைபெற்றது.
காரைநகர்வாசியாகிய 77 வயது நிரம்பிய பொன்னம்பலம் பதுமநிதி என்ற தனது மாமியாரை, கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அவருடைய மருமகனான தர்மலிங்கம் சௌந்தரராஜாவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதினமன்றத்தில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து, எதிரியின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, கருணை விண்ணப்பம் முன்வைத்தாhர்.
இறந்து போனவருக்கு 77 வயது. இறந்தவரும் எதிரியும் மாமி மருமகன் முறையான உறவினர்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என எதிரி தரப்பு சட்டத்தரணி தனது கருணை மனுவில் கோரினார்.
இதனையடுத்து, கொல்லப்பட்டவராகிய மாமியாரைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எதிரிக்கு இருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கோபாவேசம் காரணமாக பூவரசந் தடியினால் அடித்ததால், மாமியார் இறந்து போனார் என்பது, சாட்சியங்களின் மூலம் காணக்கூடியதாக இருப்பதால், இந்த வழக்கின் குற்றச்சாட்டு, கைமோசக் கொலைக் குற்றச்சாட்டுக்கு மாற்றப்பட்டு, எதிரியை குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த வழக்கில், இறந்தவருடைய வயது, சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தடி போன்ற அனைத்தையும் கவனத்தில் எடுத்து, எதிரிக்கு இந்த நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கின்றது. அத்துடன் ஐயாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால் ஒரு மாதம் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்த வழக்கை அரச சட்டவாதி நாகரட்னம் நிசாந்தன் சட்டமா அதிபரின் பிரதிநிதியாக வழக்கை நெறிப்படுத்தினார்