கடந்த சனிக்கிழமை லண்டன் மாநகர பாலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அந்தத் தாக்குதலின் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்தவர் என தற்போது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்ஸ் (Abz) இங்கிலாந்து காவல்துறையினரால் அடையாளம் காட்டப்பட்டுள்ள குறித்த நபர் தாக்குதல் சம்பவத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் எனவும் 27 வயதான இந்த நபர் பாகிஸ்தானிலிருந்து தனது பெற்றோருடன் புலம்பெயர்ந்து வந்து லண்டனில் குடியேறியவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அப்ஸ் கிழக்கு லண்டனில் உள்ள பார்க்கிங் ( Barking) என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அவர்களின் கொடியுடன் லண்டனில் உள்ள பூங்காவில் முன்னர் பிரச்சாரம் செய்தது உள்ளிட்ட இரு சம்பவங்களில் இவர் தொடர்புடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ஜிகாதிகள் பற்றிய ஆவணப்படத்தில் இவர் இடம்பெற்றிருந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தி சன் செய்தி தெரிவித்துள்ளது.
மேலும் ; எந்நேரமும், யூ டியுப் இணையதளத்தில் பதிவேற்றப்படும் மத தீவிரவாத வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார் எனவும் இதனாலேயே, தீவிரவாதிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அபிஸின் நண்பர்களில் ஒருவர், லண்டன் காவல்துறையினரைத் தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்துள்ளதாகவும், தி சன் செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக 12 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதசாரிகள் மீது, வாகனத்தை மோதியும், கத்தியால் குத்தியும், மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில், 7 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.