இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அம்மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிய அவர்களை இன்று நேரில் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருட்களை மாநில அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய பிரதேச விவசாயிகள் கடந்த முதலாம் திகதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 6ம்திகதி; போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து தலைநகர் போபால், இந்தூர் உட்பட மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையிலேயே மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக அறிவித்துள்ளார். அத்துடன் வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு முன்னுரிமை அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.