குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி நீதிமன்றத்தினால் கடந்த 10ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், சட்டமா அதிபர் திணைக்கள உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவர், கடந்த வழக்குத் தவணையில் மன்றில் ஆஜராகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். ஏனைய 4 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் 3 பேர் வியாழக்கிழமை (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் பொலிஸார் கைது செய்து இருந்தனர். அது தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
அந்நிலையில், கடந்த மாதம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர்கள் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
அன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்கள் மன்றில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர்.
தம் மீது பொய்குற்றச்சாட்டு சுமத்தி சுன்னாக பொலிஸார் கைது செய்தனர் எனவும், கைது செய்த பின்னர் தம்மை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும், அதில் தம்முடன் கைதான சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் தமது நண்பன் சித்திரவதை காரணமாக உயிரிழந்ததாகவும், பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இந்தச் சம்பவம் 2011 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றதாகவும் கூறினர்.
மேலும், உயிரிழந்த தமது நண்பனின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி விட்டு தமது நண்பன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்ததாக நீதவானிடம் தெரிவித்தனர். அப்போது சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார என்பவர் தலைமையிலான மூன்று தமிழ் பொலிஸார் உட்பட எட்டு பேர் இதனுடன் தொடர்புபட்டவர்கள் என என பொலிஸாரின் பெயர் குறிப்பிட்டு மன்றில் வாக்குமூலம் அளித்தனர்.
அதனை அடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் இளைஞர்கள் பெயர் குறிப்பிட்ட பொலிஸார் அனைவரையும் கைது செய்யுமாறும், மூன்று மாத கால பகுதிக்குள் பூரண விசாரணைகளை முன்னெடுத்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.